தமிழ்நாடு

சிந்தாத்தத்திற்கே முன்னுரிமை: சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவளிக்க திமுக மறுப்பு!

ராதாகிருஷ்ணன் ஒரு தமிழர் என்ற காரணத்திற்காக மட்டுமே அவரை நாங்கள் ஆதரிக்க முடியாது.

ராம் அப்பண்ணசாமி

இன்று (ஆக. 19) பிற்பகல் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, எதிர்க்கட்சிகள் அடங்கிய இண்டியா கூட்டணியின் குடியரசுத் துணை தலைவர் வேட்பாளரின் பெயர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குடியரசுத் துணைத் தலைவர் பதவியை ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்த பிறகு, காலியிடத்தை நிரப்புவதற்கான தேர்தல் அறிவிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இந்நிலையில், ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக மஹாராஷ்டிர ஆளுநரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார்.

இதை ஒட்டி நேற்று (ஆக. 18) நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகள் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

அதேபோல அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோரும் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு திமுக ஆதரவளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

இது தொடர்பாக ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த திமுக மூத்த தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன், `நாங்கள் சித்தாந்தத்திற்கு மட்டுமே முன்னுரிமை அளிப்போம். ராதாகிருஷ்ணன் ஒரு தமிழர் என்ற காரணத்திற்காக மட்டுமே அவரை நாங்கள் ஆதரிக்க முடியாது’ என்றார்.

இந்நிலையில், `நாடாளுமன்றத்தில் இருக்கும் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் ஆகஸ்ட் 19 செவ்வாய்க்கிழமை நண்பகல் 12:30 மணிக்கு ராஜாஜி மார்க்கில் நடைபெறும்’ என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் கணக்கில் பதிவிட்டார்.

இந்த கூட்டத்திற்கு பிறகு எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று (ஆக. 18) நடைபெற்ற கூட்டத்தில் `இந்தியாவின் நிலவு மனிதர்’ என்று அழைக்கப்படும் பத்மஸ்ரீ விருது பெற்ற முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி எம். அண்ணாதுரை, மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரனான துஷார் காந்தி ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.