தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசகர் பொறுப்பிலிருந்து பிரசாந்த் கிஷோர் தற்காலிகமாக விலகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசகராக பிரபல தேர்தல் வியூக நிபுணரும் ஜன் சுராஜ் கட்சித் தலைவருமான பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டார். தமிழக வெற்றிக் கழகம் மற்றும் பிரசாந்த் கிஷோர் இடையே 2026 சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக உடன்படிக்கை ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. தவெக தலைவர் விஜய் மற்றும் பிரசாந்த் கிஷோர் சந்திப்பும் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் கடந்த பிப்ரவரியில் நடைபெற்றது. இந்த விழா மேடையில் பிரசாந்த் கிஷோரும் இடம்பெற்றிருந்தார். இதன்பிறகு, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனித்துப் போட்டியிடும் என்பதை பிரசாந்த் கிஷோர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தவெக ஆலோசகர் பொறுப்பிலிருந்து பிரசாந்த் கிஷோர் தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார். டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், பிஹாரில் தேர்தல் பணி இருப்பதால் தற்காலிகமாக இடைவெளி எடுப்பதாகவும் நவம்பருக்குப் பிறகு தவெக ஆலோசகராகத் தொடர்வது பற்றி முடிவெடுப்பதாகவும் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு ஏற்கெனவே ஜான் ஆரோக்கியசாமி ஆலோசகராக உள்ளார்.
பிரசாந்த் கிஷோர் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் இந்தப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணப்படாததாலும் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆலோசகராகச் செயல்பட ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் உள்ளன.