தமிழ்நாடு

ஜூலை 1 முதல் தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்வு

ராம் அப்பண்ணசாமி

தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் உயர்கிறது. மின் கட்டணத்தை 4.83 % உயர்த்தி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது.

தமிழ்நாட்டில் தற்போது மின்சாரக் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 4.60 என்று இருக்கும் நிலையில், மின் கட்டண உயர்வுக்குப் பிறகு யூனிட் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ. 4.83 என்று மின்சாரக் கட்டணம் வசூலிக்கப்படும்.

2021-ல் திமுக ஆட்சி அமைந்த பிறகு மூன்றாவது முறையாக மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இந்த மின் கட்டண உயர்வால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கு ஆண்டு தோறும் ரூ. 25,000 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் முடிவால், தமிழ்நாட்டில் மின் கட்டணம் 2.18 % உயர்த்தப்பட்டது. ஆனால் அப்போது தமிழக அரசு மின் நுகர்வோருக்கு மானியம் அறிவித்தது. ஆனால் இந்த வருடம் அறிவித்துள்ள மின் கட்டண உயர்வுக்கு தமிழக அரசு மானியம் அறிவிக்கவில்லை.

வீட்டு பயன்பாடு, கைத்தறி மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள குடிசைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வழிபாட்டுதலங்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்களுக்கான மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

யூனிட் வாரியாக அரசு அறிவித்துள்ள கட்டண உயர்வு பின்வருமாறு:

0 முதல் 400 யூனிட் பயன்பாட்டுக்கான மின் கட்டணம் ₹4.60-ல் இருந்து 4.80 ஆக உயர்வு.

401 முதல் 500 யூனிட் பயன்பாட்டுக்கான கட்டணம் ₹6.15-ல் இருந்து ₹6.45 ஆக உயர்வு.

501 முதல் 600 யூனிட் பயன்பாட்டுக்கான கட்டணம் ₹8.15-ல் இருந்து ₹8.55 ஆக உயர்வு.

601 முதல் 800 யூனிட் பயன்பாட்டுக்கான கட்டணம் ₹9.20-ல் இருந்து ₹9.65 ஆக உயர்வு.

801 முதல் 1000 யூனிட் பயன்பாட்டுக்கான கட்டணம் ₹10.20-ல் இருந்து ₹10.70 ஆக உயர்வு.

1000 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு இனி ₹11.80 வசூலிக்கப்படும்.