தமிழிசை சௌந்தரராஜன் (கோப்புப்படம்) ANI
தமிழ்நாடு

பாஜகவில் சமூக விரோதிகளுக்குப் பதவிகள்: தமிழிசை வருத்தம்

கிழக்கு நியூஸ்

தமிழக பாஜகவில் சமூக விரோதிகளுக்குப் பதவிகள் வழங்கப்பட்டதில் தனக்கு வருத்தம் இருப்பதாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் பாஜக 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால், மத்தியில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைகிறது. தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை.

தமிழ்நாட்டில் சந்தித்த பெரும் தோல்வி தமிழக பாஜகவுக்குள் இருவேறு கருத்துகளை உருவாக்கியுள்ளது. அதிமுகவிடம் கூட்டணி வைத்திருந்தால், தேர்தல் முடிவுகள் மாறி வந்திருக்கலாம் என முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். இருந்தபோதிலும், 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி இருக்காது என்றும், மாநிலத் தலைவரை மாற்றினால் அதிமுகவுடன் கூட்டணி அமையும் என்றும் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த நிலையில், தமிழிசை சௌந்தரராஜன் இந்து தமிழ் திசைக்கு நேர்காணல் கொடுத்துள்ளார். இதில் கடந்த கால தேர்தல்களில் அண்ணாமலையின் செயல்பாடுகள் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த தமிழிசை சௌந்தரராஜன், தற்போது மதிப்பீடு கொடுத்தால் அது தவறாகிவிடும் என்று பதிலளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "அண்ணாமலை சுறுசுறுப்பான தம்பி. யாத்திரை மேற்கொண்டிருக்கிறார். கட்சியைப் பல இடங்களில் கொண்டு சேர்த்திருக்கிறார். குறுகிய காலங்களில் நல்ல பிரபலமடைந்துள்ளார். எனவே, நல்ல இளம் தலைவர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. எங்களைப் போன்றவர்கள் கட்சி இப்படி வளர வேண்டும் என்று எண்ணும்போது, அதுமாதிரியான பல திறமைகள் அவரிடம் உள்ளது.

ஆனால், முன்னாள் மாநிலத் தலைவராக எனக்குள் இருக்கும் ஆசை என்னவென்றால், கட்சியின் கட்டமைப்பு இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும். இன்னும் கட்சியின் பூத் செயல்பாடுகள் பலப்படுத்தப்பட வேண்டும். கட்சியின் பிரதிநிதிகள் இன்னும் வர வேண்டியுள்ளது. உள்ளாட்சிப் பிரதிநிதிகள், எம்எல்ஏ, எம்.பி.க்கள் வர வேண்டும். கட்சி தொடர் வளர்ச்சியைப் பெற வேண்டும். இதில் பல இடங்களில் அவர்கள் வெற்றி பெற்றிருக்கலாம். இன்னும் முயற்சி செய்ய வேண்டிய அவசியமும் இருக்கிறது. பூத் கமிட்டியை வலுப்படுத்த வேண்டும் என்பது எனக்கு ஆதங்கம். இவற்றை நான் எடுத்துச் சொல்வேன்.

மேலும், தமிழக பாஜகவில் சமூக விரோதிகள் சிலருக்குப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது. நான் கட்சியிலிருந்தபோது இதுபோன்றவர்களை ஊக்கப்படுத்த மாட்டேன். கட்சிக்காக உழைக்கும் தொண்டர்களுக்கு அதிகாரமும், அங்கீகாரமும் கொடுக்கலாம். மற்றபடி, அண்ணாமலை நல்ல தலைவர் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை.

ஒவ்வொரு மாநிலத் தலைவர்களும் ஒவ்வொரு வழியில் கட்சியை வளர்த்துள்ளார்கள். அண்ணாமலையின் நடவடிக்கையையும் பாராட்டுகிறேன். ஆனால், கட்சிக்குத் தேர்தல் வியூகம் என்று வரும்போது அனைவரும் இணைந்து முடிவெடுக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்தாக உள்ளது" என்றார்.