தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு, அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தமிழக மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து பின்வருமாறு,
`உழவே தலை என உழுதுண்டு உலகத்தார்க்கு உண்டி கொடுக்கும் உழவர் பெருமக்களுக்கும் - உலகெங்கும் வாழும் தமிழ் உடன்பிறப்புகளுக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்! உதயசூரியனின் ஒளியெனத் தமிழரின் உள்ளங்களில் மகிழ்ச்சி நிறையட்டும்! புதுப்பானையில் தைப்பொங்கல் பொங்குவதுபோல் வாழ்வில் இன்பம் பொங்கட்டும்!’ என்றார்.
தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி பின்வருமாறு,
`உலகத் தமிழர்கள் அனைவரும் அன்பு பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் அறுவடைத் திருநாளாம் பொங்கல் திருநாளில், மக்கள் அனைவரும் குன்றா நலமும், குறையா வளமும், மங்கா புகழும், மாசிலா செல்வமும் பெற்று நிறை வாழ்வு வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது தூய வழியில் மனதார வாழ்த்தி, மக்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்.
பாமக தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தி,
`வணக்கம் உங்கள் அனைவருக்கும் எங்களுடைய இனிய தைத்திருநாள் பொங்கல் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நம் அனைவரது இல்லங்களிலும் இன்பமும், மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் பொங்கி வழியட்டும். உங்களது அனைத்து இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும். பொங்கலோ!! பொங்கல்!! பொங்கலோ!! பொங்கல்!!’ என்றார்.
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தி பின்வருமாறு,
`தமிழ்மொழி மீட்க, தமிழர் நலன் காக்க, தமிழ்நாட்டின் வளங்கள் காத்திட, தமிழ் முன்னோர்களின் ஈகம் போற்றிட, தமிழர்தம் கலை, இலக்கிய பண்பாடு, வரலாறு காத்திட, தமிழர் உள்ளங்களிலும் இல்லங்களிலும் பொங்கட்டும் தமிழ்த்தேசியப் புரட்சிப் பொங்கல்! உலகெங்கும் பரவி வாழும் எம்முயிர்ச்சொந்தங்கள் அனைவருக்கும், நெஞ்சம் நிறைந்த தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துகள்!’ என்றார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தி,
`தமிழக மக்கள் அனைவருக்கும், தமிழக பாஜக சார்பாக, இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உழவுத் தொழிலின் ஆதாரமாக விளங்கும் சூரிய பகவானுக்கும், இயற்கை அன்னைக்கும் நன்றி தெரிவிக்கும் இந்திர விழாவான இன்று, அனைவரும் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடுவோம்.
அனைவருக்கும் அனைத்து வளங்களும், நலன்களும் கிடைக்கட்டும். இருண்ட காலம் நீங்கி, ஒளி பிறக்கட்டும். அனைவரின் வாழ்விலும் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவட்டும். பொங்கலோ பொங்கல்!’ என்றார்.