விஜய் பொதுக்கூட்டத்திற்கு 5000 பேருக்கு மட்டுமே அனுமதி: புதுச்சேரி காவல்துறை ANI
தமிழ்நாடு

விஜய் பொதுக்கூட்டத்திற்கு 5000 பேருக்கு மட்டுமே அனுமதி: புதுச்சேரி காவல்துறை | TVK Vijay |

கூட்டத்தில் கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியோர் பங்கேற்க அனுமதி இல்லை...

கிழக்கு நியூஸ்

புதுச்சேரியில் வரும் டிசம்பர் 9 அன்று நடைபெறவுள்ள தவெக தலைவர் விஜயின் பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.

2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கியுள்ள நடிகர் விஜய், பொதுக்கூட்டங்கள், மக்கள் சந்திப்பு, பரப்புரை ஆகிய நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அதன்படி திருச்சி, அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், நாமக்கல் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார். குறிப்பாக கடந்த செப்டம்பர் 27 அன்று அவர் கரூரில் பிரசாரம் செய்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் எதிர்பாராத விதமாக 41 பேர் உயிரிழந்தார்கள். அச்சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், விஜய் தனது பிரசாரத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தார்.

இதையடுத்து மீண்டும் பிரசாரம், பொதுக்கூட்டம் மற்றும் சாலைவலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த விஜய் முயன்று வருகிறார். அதன்படி சேலத்தில் பிரசாரத்தைத் தொடங்க அனுமதி கேட்கப்பட்ட நிலையில் காவல்துறை அனுமதி மறுத்தது. அதன்பின் புதுச்சேரியில் சாலைவலம் செல்ல தவெக தரப்பினில் அனுமதி கோரப்பட்டது. அப்போது, அண்டை மாவட்டங்களில் இருந்தும் மக்கள் புதுச்சேரிக்கு வர வாய்ப்புள்ளது என்பதால் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் நோக்கில் சாலைவலத்திற்கு அனுமதி வழங்க முடியது என்று காவல்துறை மறுத்தது.

இதைத் தொடர்ந்து பலமுறை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை, தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் சந்தித்தார். அதன்பின் டிசம்பர் 9 அன்று உப்பளம் துறைமுகம் பகுதியில் விஜய் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டது. இதற்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி வழங்கியுள்ள நிலையில், முக்கிய நிபந்தனைகளையும் விதித்துள்ளது. அதன்படி, பொதுக்கூட்டத்திற்கு 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி. 10 கேபின்கள் அமைத்துப் பிரித்து ஒரு கேபினுக்குள் 500 பேர் வீதம் அமர்த்த வேண்டும். கூட்டத்தில் கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியோர் பங்கேற்க அனுமதி இல்லை. பொதுக்கூட்டத்திற்கு வருபவர்கள் கியூஆர் கோட் முறையில் அனுமதிக்கப்படுவர். மக்களுக்கு குடிநீர் வசதி போன்றவை முறையாக ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களை தயாராக நிறுத்த வேண்டும் போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

The police have granted conditional permission for the public meeting of TVK leader Vijay to be held in Puducherry on December 9.