தவெகவில் இணைந்தார் நாஞ்சில் சம்பத் 
தமிழ்நாடு

தவெகவில் இணைந்தது ஏன்?: பிரபல அரசியல் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் விளக்கம் | Nanjil Sampath |

தம்பி விஜயைச் சந்தித்த பொன்னான தருணத்தில் நான் புதிதாகப் பிறந்தது போல் உணர்கிறேன்....

கிழக்கு நியூஸ்

விஜய்க்கு ஆதரவாகப் பேசியதற்காக திமுகவில் என்னைத் திட்டமிட்டு நிராகரித்தார்கள். திமுக என்னை முடக்கி வைத்திருந்தார்கள், விஜய் என்னை இயங்க வைத்திருக்கிறார் என்று பிரபல அரசியல் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.

2026 சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சி மூலம் போட்டியிடுகிறார். இக்கட்சியில் சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இணைந்தார். அவரைத் தொடர்ந்து பிரபல அரசியல் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் விஜய் முன்னிலையில் கட்சியில் இணைந்துள்ளார். இவர் இதற்கு முன்னதாக திமுக, மதிமுக, அதிமுக, அமமுக ஆகிய கட்சிகளில் இருந்த நாஞ்சில் சம்பத், கடந்த சில ஆண்டுகளாக எந்தக் கட்சியிலும் சேராமல் அரசியல் தொடர்பான பொது விவாத மேடைகளில் பேசி வந்தார். இந்நிலையில், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயைச் சந்தித்து, பொன்னாடை அணிவித்து, நீயும் முதல்வர் ஆகலாம் என்கிற புத்தகத்தை கொடுத்து தவெகவில் இன்று என்னை நான் இணைத்துக் கொண்டேன். 6 ஆண்டு காலம் எந்த அரசியல் கட்சியிலும் என்னை இணைத்துக் கொள்ளாமல் இருந்த நான் இன்று தவெகவில் இணைத்துக் கொண்டு, நாடு முழுக்க தவெகவின் பிரசாரகனாக பவனி வரத் தம்பி விஜய் என்னை அனுமதித்திருக்கிறார். என்னை பார்த்த நிமிடத்தில் நான் உங்கள் ரசிகர் என்று விஜய் சொன்ன நிமிடத்தில் நான் மெய்சிலிர்த்துப் போனேன். இப்படி ஒரு அங்கீகாரத்தை தம்பி தருவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபோது தவெகவுக்கு ஆதரவாகப் பேசினேன். அப்போதிலிருந்து அறிவாலயத்தில் இருந்து காது கொடுத்து கேட்க முடியாத அளவிற்கு வசை சொற்களால் என்னை வசைமாறி பொழிந்தார்கள். தொடர்ந்து ஐந்து நாட்கள் தஞ்சை மாவட்டத்தில் சுற்று பயணத்திற்கு ஒப்புக் கொண்டிருந்தேன். அந்த நிகழ்ச்சியை ரத்து செய்தார்கள். அறிவுத் திருவிழாவில் என்னைத் திட்டமிட்டு நிராகரித்தார்கள். அந்த மேடையிலேயே கரு. பழனியப்பன் என்னைக் கேலி செய்து பேசினார். அதற்கு ஐந்து நாள் முன்பு திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர், நான் பெரிதும் மதிக்கின்ற சுபவீரபாண்டியன், திமுக மேடையிலேயே என்னைக் குறைவாகப் பேசினார். அதனால் நான் மனமுடைந்து போனேன். திமுக என்னை முடக்கி வைத்திருந்தார்கள், விஜய் என்னை இயங்க வைத்திருக்கிறார். நான் தவெகவில் என்னை இணைத்துக் கொண்டதும் உற்சாகமான மனநிலையில் இருக்கிறேன். கடந்த காலத்தில் ஏற்பட்ட கசப்புகள், காயங்களிலிருந்து விடுபட்டவனாக உணர்கிறேன். தம்பி விஜயைச் சந்தித்த பொன்னான வேளையிலிருந்து புதிதாகப் பிறந்ததைப் போல் உணர்கிறேன். நான் தவெகவில் இணைந்திருக்கிறேன். கட்சி மாறவில்லை” என்றார்.

I was systematically rejected by the DMK for speaking in support of Vijay. The DMK had me paralyzed, but Vijay is keeping me going, said famous stage speaker Nanjil Sampath.