நல்லகண்ணு மறைவு: அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் நேரில் அஞ்சலி 
தமிழ்நாடு

நல்லகண்ணு மறைவு: அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் அஞ்சலி | R Nallakannu |

வயது மூப்பு காரணமாக 101 வயதில் உயிரிழந்த நல்லகண்ணுவின் உடல் அவரது விருப்பப்படி சென்னை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது...

கிழக்கு நியூஸ்

மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு உடல்நலக் குறைவால் உயிரிழந்த நிலையில், அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

சுதந்திரப் போராட்ட வீரரும், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு கடந்த சில மாதங்களாகவே வயது மூப்பு காரணமாக உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து கடந்த பிப்ரவரி 1 அன்று தீவிர மூச்சுத் திணறல் பிரச்னை ஏற்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று (பிப். 25) பிற்பகல் 1:55 மணிக்கு காலமானார்.

நல்லகண்ணுவுக்கு அஞ்சலி

இதையடுத்து சென்னை தியாகராய நகரில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகமான பாலன் இல்லத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நேற்று முதல் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர்கள் உள்ளிட்ட பிரபலங்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் சமூக ஊடகப் பக்கங்களில் அஞ்சலி தெரிவித்துள்ளனர்.

அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் அஞ்சலி

குறிப்பாக நேற்று நல்லகண்ணு மறைவு குறித்த தனது இரங்கல் செய்தியை வெளியிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, கவிஞர் வைரமுத்து, நடிகர்கள் விஜய் சேதுபதி, சத்யராஜ், நாசர், இயக்குநர் பா. ரஞ்சித் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.

வாழ்நாள் முழுவதும் போராடியவர்

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி கூறியதாவது:-

“வாழ்நாள் முழுவதும் போராடியவர். அவருடைய அரசியல், பொதுவாழ்வு, மக்கள் மீதான அக்கறை என பல விஷயங்களை அவர் மக்களுக்காக விட்டுச் சென்றுள்ளார். அவற்றை அவரின் வாழ்க்கையிலிருந்து ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு, தொடர்ந்து அவற்றை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்" என்றார்.

அஞ்சலி செலுத்திய பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் கூறியதாவது:-

“நல்லகண்ணு நேர்மையான தலைவர். ஏற்றத்தாழ்வு பாகுபாடுகள் பாராதவர். சுதந்திரப் போராட்டக் காலத்தில் தன் மீசையைச் சுட்டதான என்னிடம் கூறியிருக்கிறார். அப்படிப்பட்ட தலைவரைத் தமிழ்நாடு இழந்திருக்கிறது. அவருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். அவரது வாழ்வை வருங்கால தலைமுறையினர் தெரிந்துகொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

தவெக தலைவர் விஜய் அஞ்சலி

தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உடனிருந்தார். முன்னதாக நல்லகண்ணு மறைவுக்கு அஞ்சலி செய்தியை வெளியிட்டுள்ள விஜய், "சுதந்திரப் போராட்ட வீரர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், விவசாயிகளுக்காகவும் மக்களின் உரிமைகளுக்காகவும் தம் வாழ்நாளின் பெரும் பகுதியைச் செலவிட்ட போராளி, தோழர் அய்யா இரா.நல்லகண்ணு அவர்கள் காலமான செய்தியறிந்து மன வேதனை அடைந்தேன்" என்று பதிவிட்டுள்ளார்.

ரஜினிகாந்த் அஞ்சலி

இதையடுத்து இன்று காலை முதல் நல்லகண்ணுவின் உடலுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் உட்பட பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அதேபோல், நடிகர்கள் ரஜினிகாந்த், சூர்யா, சிவகார்த்திகேயன் உல்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளரிடம் பேசிய ரஜினிகாந்த் கூறியதாவது:-

“ஓமந்தூரார், அண்ணா, காமராஜர், கக்கன் ஆகியோரைப் பார்த்ததில்லை. அவர்கள் அனைவரையும் சேர்த்து நல்லகண்ணுவிடம் பார்த்தேன். நல்லவராகவும் நேர்மையானவராகவும் இருந்தால் மதிப்பும் மரியாதையும் தானாக வரும் என்பதற்கு இவர் எடுத்துக்காட்டு. பெரிய ஆத்மா தோழர் நல்லகண்ணுவுக்கு எனது வீர வணக்கம்” என்றார்.

Senior communist leader Nallakannu has passed away due to ill health, with political leaders, celebrities and the public paying tribute to his body.