கட்டுக்கடங்காத கூட்டம் வரும்போது, சரியாக நேரத்துக்கு வர வேண்டும் என கரூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த பிறகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கரூரில் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது கூட்டநெரிசல் ஏற்பட்டு மயக்கம் மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக 39 பேர் உயிரிழந்துள்ளார்கள். உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நள்ளிரவில் ஆறுதல் கூறினார். குடும்பத்தினருடன் துபாய் சென்றிருந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நள்ளிரவில் கிளம்பி இன்று காலை கரூர் வந்தடைந்தார். கரூர் அரசு மருத்துவமனையில் நேரில் ஆய்வு செய்து மருத்துவர்களிடம் நிலைமை குறித்து அவர் கேட்டறிந்தார்.
பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது
"கரூரில் நடந்தது மிகத் துயரமான சம்பவம். இது மாதிரியான ஒரு சம்பவம் நடந்திருக்கவே கூடாது. அரசு முழுப் பாதுகாப்பைக் கொடுத்திருந்தாலும், இப்படி மிகப் பெரிய ஒரு கோர விபத்து நடந்துள்ளது. ஏறத்தாழ 39 பேரை விபத்தில் இழந்துள்ளோம்.
நான்கு நாள்கள் ஓய்வுக்காக குடும்பத்துடன் வெளிநாட்டில் இருந்தேன். என்னிடத்திலும் தொடர்புகொண்டு முதல்வர் மிகுந்த வேதனையில் பேசிக் கொண்டிருந்தார். அதன்பிறகு, அவரே நள்ளிரவு 1 மணிக்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலைத் தெரிவித்திருக்கிறார்.
உயிரிழந்த 39 பேரில் பெண்கள் 17, ஆண்கள் 13, குழந்தைகள் 9 பேர் உயிரிழந்துள்ளார்கள். குழந்தைகளில் ஆண் குழந்தைகள் 4 பேர், பெண் குழந்தைகள் 5 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
அரசு சார்பாக என்னென் செய்ய முடியுமோ அதைச் செய்துள்ளோம். ஐசியூ சென்று அங்குள்ள நோயாளிகள் அனைவரையும் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறேன். மருத்துவர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாகப் பேசியிருக்கிறேன். மருத்துவர்களிடம் கேட்டறிந்த விவரங்களை முதல்வரிடம் தெரிவிக்கவுள்ளேன்.
மருத்துவர்கள் முழு வேகத்தில் இயங்கி தங்களுடைய பணிகளைச் செய்து வருகிறார்கள். கரூர், சேலம், நாமக்கல், மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, கோவை, திருச்சி என மற்ற மாவட்டங்களிலிருந்து மொத்தம் 145 மருத்துவர்கள் வரழைக்கப்பட்டுள்ளார்கள். கரூரில் 200 மருத்துவர்கள் என மொத்தம் 345 மருத்துவர்கள் மருத்துவப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கரூர் மாவட்ட ஆட்சித் தலைவரோடு இணைந்து திருச்சி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர்களும் ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார்கள். சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் பெருமக்கள், மாவட்ட ஆட்சியர்கள் உள்பட அனைவரும் காயமடைந்தவர்களுக்கு உற்ற துணையாக இருக்கிறார்கள்.
எதிர்க்கட்சித் தலைவர் இதே இடத்தில் இரு நாள்களுக்கு முன் பிரசாரம் செய்துள்ளார். டிஜிபி நேற்று தெளிவாக எவ்வளவு கூட்டம் வந்துள்ளது, எவ்வளவு கூட்டம் வரும் என்று சொல்லப்பட்டது, எவ்வளவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டது, எவ்வளவு பாதுகாப்பு அதிகமாகக் கொடுக்கப்பட்டது, எவ்வளவு தாமதமாக ஒவ்வொரு கூட்டமும் நடத்தப்பட்டது என தெளிவாக விளக்கி சொல்லியிருக்கிறார்.
இந்த இடத்தில் நான் அரசியல் பேச விரும்பவில்லை. அவர் சொன்னது தப்பு, இவர் செய்தது தவறு என்று சொல்ல விரும்பவில்லை. ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி வருகிறார்கள். அவர்கள் விசாரித்துவிட்டு அறிக்கை கொடுக்கட்டும். மக்களுக்கு அப்போது உண்மை தெரியும். அதன் அடிப்படையில் சட்ட ரீதியான நடவடிக்கையை முதல்வர் எடுப்பார்.
எல்லா இயக்கத் தலைவர்களுக்கும் மக்களைச் சந்திக்க வேண்டும் என்பது அவர்களுடைய உரிமை, ஜனநாயகக் கடமை. ஆனால், காவல் துறையினர் ஒவ்வொரு முறை பார்க்கும்போது கூட்டம் அதிகமாக இருக்கிறது, அவர்களுடைய செயல்களைப் பார்க்கும்போது நாம் அவர்களிடம் கோரிக்கை வைக்கிறோம். மரத்தின் மீது ஏற வேண்டாம், பொதுமக்களுக்கு இடையூறாக இருக்க வேண்டாம் எனப் பல விஷயங்களைச் சொல்கிறோம்.
இதற்கு மேல் கட்டுப்படுத்துவதும் சம்பந்தப்பட்ட இயக்கத் தலைவர் மற்றும் இரண்டாம் கட்டத் தலைவர்களின் பொறுப்பு. கட்டுக்கடங்காத கூட்டம் வரும்போது, சரியாக நேரத்துக்கு வர வேண்டும். இது மாதிரி நிறைய விஷயங்கள் உள்ளன. இனி நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். யாரையும் நான் குறை கூறவில்லை" என்றார் உதயநிதி ஸ்டாலின்.
Karur | Karur Stampede | Udhayanidhi Stalin | TVK Vijay | Vijay |