Tamil Nadu: Madras HC hears plea seeking approval to bury Armstrong's body at BSP Office in Chennai  
தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங் படுகொலை: புதிய சிசிடிவி காட்சிகளை வெளியிட்ட காவல் துறை

கிழக்கு நியூஸ்

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக காவல் துறையினர் புதிய சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ளார்கள்.

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 அன்று 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் என்பதால், இந்த சம்பவம் தேசிய அளவில் கவனம் பெற்றது. மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பின.

இந்தக் கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து, சென்னை காவல் ஆணையர் உள்பட பல்வேறு ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டார்கள். புதிய காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்றுக்கொண்டார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 11 பேரையும் காவல் துறையினர் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள். கடந்தாண்டு நடைபெற்ற ஆற்காடு சுரேஷ் கொலை சம்பந்தமாக ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், ஆருத்ரா கோல்ட் நிறுவனத்தின் பெயர் அடிபடுவதால், அந்தக் கோணத்திலும் விசாரணை நடைபெற வேண்டும் என அரசியல் தலைவர்கள், இயக்கங்கள், ஆம்ஸ்ட்ராங்குக்கு நெருக்கமானவர்கள் தரப்பிலிருந்து குரல்கள் வலுத்தன.

மேலும், கைது செய்யப்பட்டவர்கள் உண்மைக் குற்றவாளிகள் அல்ல என்றும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இவற்றுக்கு மத்தியில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவரான திருவேங்கடம் என்பவர் காவல் துறையினரால் இன்று காலை என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுக்க பேசுபொருளானது.

காவல் துறையினரின் என்கவுன்ட்டர் சம்பவமும் காலை முதல் பேசுபொருளானது. யாரைக் காப்பாற்ற இந்த என்கவுன்ட்டர் என சந்தேகம் வலுவாக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பினார்.

இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகளைக் காவல் துறை வெளியிட்டுள்ளது. கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் காட்டி காவல் துறை தரப்பில் சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்கள் உண்மைக் குற்றவாளிகள் அல்ல என விமர்சனங்கள் எழுந்துள்ள சூழலில் காவல் துறை தரப்பில் புதிய சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.