தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங் படுகொலை: திருவேங்கடம் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது ஏன்?

கிழக்கு நியூஸ்

ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் கைதான திருவேங்கடம் என்பவர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது தொடர்பாக காவல் துறை தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 அன்று படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தேசிய அளவில் கவனம் பெற்ற நிலையில், இதுதொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்த 11 பேரையும் காவல் துறையினர் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள். கைது செய்யப்பட்டவர்களில் திருவேங்கடம் என்பவரும் ஒருவர். கொலை நடந்த விதம் குறித்து விசாரிப்பதற்காக திருவேங்கடம் என்பவரைக் காவல் துறையினர் மாதவரம் அருகே அழைத்துச் சென்றதாகத் தெரிகிறது. அப்போது, திருவேங்கடம் காவல் துறையினரிடமிருந்து தப்பிச் செல்ல முயற்சித்ததாகத் தெரிகிறது. இதனால், காவல் துறையினர் அவரை என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றார்கள்.

இதுதொடர்பாக காவல் துறை தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது:

"கடந்த ஜூலை 5-ல் பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கே-1 செம்பியம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், திருவேங்கடம் உள்பட 11 நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

மேலும், கைது செய்யப்பட்ட திருவேங்கடம் உள்பட 11 பேர் விசாரணைக்காக போலீஸ் காவலில் எடுக்கப்பட்டார்கள். இவர் மேற்கண்ட கொலை வழக்கு தவிர இரண்டு கொலை வழக்குகள் மற்றும் வழிப்பறி, கொடுங்காய வழக்கு ஆகிய ஐந்து வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளார்.

அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் இன்று அதிகாலை போலீஸ் காவலில் இருந்த திருவேங்கடத்தை மேற்கண்ட வழக்கில் சம்பந்தப்பட்ட ஆயுதங்களைக் கைப்பற்ற, அவர் தங்கியிருந்த மணலியில் உள்ள வீட்டுக்குத் தக்க பாதுகாப்புடன் அரசு வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார்.

அவ்வாறு அழைத்துச் செல்லும்போது, இயற்கை உபாதைக்காக ரெட்டேரி ஏரிக்கரை ஆட்டு மந்தை செல்லும் வழியில் போலீஸ் வாகனத்தை நிறுத்தியபோது, பாதுகாப்பில் இருந்த காவலர்களைத் தள்ளிவிட்டு, அவர் தப்பி ஓடிவிட்டார்.

உடனடியாகப் பாதுகாவலாகச் சென்ற காவலர்கள், அவரைப் பிடிக்க முயற்சித்தும், பிடிக்க இயலவில்லை. புழல் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட, வெஜிடேரியன் வில்லேஜ் என்ற இடத்தில் மறைந்திருந்த திருவேங்கடத்தைப் பிடிக்க முயற்சித்தபோது, அவர் தான் மறைத்து வைத்திருந்த கள்ளத்துப்பாக்கியை எடுத்து காவலர்களை நோக்கி சுட்டுள்ளார்.

உடனடியாக காவல் ஆய்வாளர் திருவேங்கடத்தைத் தற்காப்புக்காகத் துப்பாக்கியால் சுட்டதில், காயமடைந்த திருவேங்கடம் உடனடியாக மெரிடியின் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தார்கள். இது சம்பந்தமாக எம்3 புழல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, முதல் தகவல் அறிக்கை நீதிமன்ற நடுவர் விசாரணைக்காக அனுப்பப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.