கோப்புப்படம் ANI
தமிழ்நாடு

போக்குவரத்துத் துறை vs காவல் துறை: தொழிலாளர் சம்மேளனம் முதல்வருக்குக் கடிதம்!

கிழக்கு நியூஸ்

தமிழ்நாட்டில் காவல் துறை மற்றும் போக்குவரத்துத் துறை இடையே நிலவி வரும் மோதல் போக்கைத் தடுத்திட வேண்டும் என தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளர் சம்மேளனம், முதல்வர் மு.க. ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதியுள்ளது.

கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"சில நாள்களுக்கு முன் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்தில் திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரியில் பேருந்தில் ஏறி பயணம் செய்த காவல் துறை காவலர் பயணச் சீட்டு பெறாமல் நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் சமூக வலைதளங்கள், பத்திரிகைகளில் வெளிவந்தது. காவல் துறை காவலர்களுக்குப் பேருந்தில் இலவசம் பயணம் கிடையாது எனத் தெளிவுபடுத்திய போக்குவரத்துத் துறையின் செய்தியும் வந்துள்ளது. கடந்த இரண்டு நாள்களாக அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை மறித்து காவல் துறை அபராதம் விதிக்கும் செய்திகளும் வந்துள்ளன. இவை அனைத்தும் தங்கள் கவனத்துக்கு நிச்சயமாக வந்திருக்கும். இந்தப் போக்கினைத் தடுத்து நிறுத்திட தங்கள் வசமுள்ள காவல் துறைக்கு அறிவுரை வழங்கிட வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் செயல்படுத்தும் அனைத்து இலவசப் பயணத் திட்டங்களின் முழுப் பயணக் கட்டணத் தொகைகளையும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்கிட வேண்டும். பொது போக்குவரத்து சேவை என்பது இன்றியமையாதது. அரசு போக்குவரத்துக் கழகங்களை அழிவுப் பாதையிலிருந்து மீட்டெடுக்க வேண்டியது தமிழக அரசின் தலையாய கடமையாகும்.

காவல் துறை - போக்குவரத்துக் கழக மோதல் போக்கினை தடுத்திடுங்கள். அரசுப் போக்குவரத்துக் கழகங்களைப் பாதுகாத்திடுங்கள் என வேண்டிக்கொள்கிறோம்."