நிதி நிறுவன மோசடி வழக்கில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத் தலைவர் தேவநாதன் கைது செய்யப்பட்டது தொடர்பாக காவல் துறை விளக்கமளித்துள்ளது.
சென்னை மயிலாப்பூரில், மயிலாப்பூர் சாசுவதா நிதி நிறுவனம் 150 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. கடந்த 2017 முதல் இதன் நிர்வாக இயக்குநராக தேவநாதன் நிர்வகித்து வருகிறார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்த இவர், சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இவருடைய நிதி நிறுவனத்தில் மோசடி ஏற்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக எழுந்த புகாரின்பேரில் தேவநாதன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் புதுக்கோட்டையில் வைத்து தேவநாதனை நேற்று கைது செய்தார்கள்.
இந்த நிலையில் தேவநாதனைக் கைது செய்தது தொடர்பாக பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் துறை விளக்கமளித்துள்ளது.
"சென்னை மயிலாப்பூரில் 150 ஆண்டுகளாக இயங்கி வந்த மயிலாப்பூர் சாசுவதா நிதி நிறுவனம் மீது மனுதாரர் பிரசாத் (52) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை செய்ததில் இந்த நிறுவனம், நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், நிறுவனத்தின் இயக்குநர்கள் கொடுத்த பொய்யான வாக்குறுதிகளை நம்பிய மனுதாரர் கடந்த 2021 முதல் 2024 வரை உள்ள இடைப்பட்ட நாள்களில் நிறுவனத்தில் உள்ள பல்வேறு திட்டங்களில் ரூ. 46,49,180-ஐ முதலீடு செய்து முதிர்ச்சி அடைந்த பிறகும் பணத்தைத் திருப்பித் தரவில்லை என்ற காரணத்தால் பொருளாதாரக் குற்றப்பிரிவில் புகார் கொடுக்கப்பட்டது. மேலும், இந்த நிறுவனம் கடந்த 1872 ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இதில் தேவநாதன் யாதவ் என்பவர் 2017 முதல் நிர்வாக இயக்குநர் நிர்வகித்து வருகிறார்.
மனுதாரர் கொடுத்த புகாரில் மேற்படி நிறுவனம் பல கவர்ச்சிகரமான திட்டங்களில் மற்றும் ஓய்வூதியத் திட்டம் என்ற பெயரில் முதியோர் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கான சிறப்பான திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 8% முதல் 12% வரை வட்டி தருவதாகக் கொடுத்த பொய்யான வாக்குறுதிகளை அளித்து பண முதலீட்டு தொகை முதிர்வு பெற்ற பிறகும் பணத்தினைத் திரும்பத் தரவில்லை.
மேற்கண்ட நிறுவனம் 144 முதலீட்டாளர்களிடம் ரூ. 24.5 கோடி பணத்தைப் பெற்று ஏமாற்றியதாக சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் இயக்குநர்களுக்கு எதிராக கடந்த 12 அன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
உரிய பலன் விசாரணைக்குப் பிறகு காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கைய்யா தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு 13 அன்று மேற்படி நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தேவநாதன் யாதவ் புதுக்கோட்டையிலும், இயக்குநர்கள் குனசீலன், மகிமைநாதன் என்பவர்கள் சென்னையிலும் கைது செய்து விசாரணை செய்யப்பட்டு வருகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.