தமிழக காங்கிரஸ் சார்பில் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கோயில் மற்றும் தர்காவில் நடைபெறவிருந்த மத நல்லிணக்க வழிபாட்டிற்கு மதுரை மாநகர காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் தர்காவை முன்வைத்து நடந்து வரும் விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் அனுமதி பெற்று கடந்த ஜன.5-ல் மதுரை பழங்காநத்தம் பகுதியில் இந்து முன்னணியினர் ஆரப்பாட்டம் நடத்தினார்கள்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நேற்று (பிப்.5) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது,
`அறுபடை வீட்டை கலவர பூமியாக மாற்றுவதற்கு ஒரு கும்பல் வெளியில் இருந்து மக்களைக் கொண்டு வந்து உள்ளூர் மக்களுக்கு எதிராக பிரச்னையை உருவாக்கி வருகிறது. இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறோம். பிப்.6-ல் தமிழக காங்கிரஸ் சார்பில் திருப்பரங்குன்றம் கோயிலில் மத நல்லிணக்க வழிபாடு செய்யவிருக்கிறோம்.
சிக்கந்தர் பாதுஷாவையும் வழிபட இருக்கிறோம். தமிழகத்தை கலவர பூமியாக மாற்ற பாஜக துணையோடு ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி போன்ற அமைப்புகள் முயற்சி செய்து வருகின்றன. தமிழக அரசு இதை இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும்’ என்றார்.
ஆனால், திருப்பரங்குன்றம் மலை மீது ஏறிச் சென்று வழிபாடு நடத்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி உள்ளது. அரசியல் கட்சியினர் மற்றும் பிற அமைப்புகள் மலை மீது ஏற அனுமதி இல்லை என்பதால் தமிழக காங்கிரஸ் அறிவித்த மத நல்லிணக்க வழிபாட்டிற்கு மதுரை மாநகர காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து மதுரை பயணத்தை ரத்து செய்துள்ளார் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை.