சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் மரண விவகாரத்தின் எதிரொலியாக, தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை கலைக்கும்படி தமிழக காவல்துறை இயக்குநர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
நிகிதா என்பவர் அளித்த நகை திருட்டு புகாரின்பேரில் கடந்த ஜூன் 28 அன்று விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட திருப்புவனம் மடப்புரம் காளி கோயில் காவலாளி அஜித்குமார், தனிப்படை காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்தார்.
ஒவ்வொரு மாவட்டங்களிலும், காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர்களின் கட்டுப்பாட்டில் தனிப்படைகள் இயங்கி வருகின்றன. குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்களை காவலில் எடுத்து தனிப்படை காவலர்கள் விசாரிப்பது வழக்கமாக பின்பற்றப்படும் நடைமுறை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், திருப்புவனம் சம்பவத்தின் எதிரொலியாக தமிழகம் முழுவதும் செயல்படும் அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை கலைக்க காவல்துறை இயக்குநர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
குற்றச்சம்பவங்கள் நடைபெறும்போது, வழக்குகளின் தன்மையைப் பொறுத்து தனிப்படைகளை அமைத்து விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும், எப்போதும் தனிப்படைகளை வைத்திருக்கக்கூடாது என்றும், காவல்துறை மண்டல ஐஜிகளுக்கு, சங்கர் ஜிவால் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.