சிவகங்கை இளைஞர் அஜித்குமார் காவல் மரண வழக்கில் மதுரை மாவட்ட நீதிபதி சுந்தர்லால் சுரேஷை விசாரணை அதிகாரியாக நியமித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் மடப்புரம் கோயிலில் காவலாளியாகப் பணிபுரிந்து வந்தவர் அஜித்குமார். மதுரையிலிருந்து கோயிலுக்கு வந்த நிகிதா மற்றும் அவருடைய தாயாருக்கு இவர் உதவியிருக்கிறார்.
நிகிதாவின் காரில் காணாமல் போன நகைத் திருட்டு வழக்கு தொடர்பாக அஜித்குமாரை காவல் துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள். காவல் துறையினரின் துன்புறுத்தலால் விசாரணையின்போது, அஜித்குமார் உயிரிழந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக 6 காவலர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். பிரேதப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் கொலை வழக்காகப் பதிவு செய்து காவலர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டார்கள். சிவகங்கை எஸ்பி ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதனிடையே, திருப்புவனத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கார்த்திக் ராஜா, வழக்கறிஞர் மாரீஸ்குமார் ஆகியோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று காலை விசாரணை வந்தது. அப்போது, திருட்டு புகார் குறித்து வழக்குப்பதிவு செய்யாதது ஏன், வழக்குப்பதிவு செய்யாமல் தனிப்படையிடம் எதன் அடிப்படையில் ஒப்படைக்கப்பட்டது எனப் பல்வேறு கேள்விகளை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை முன்வைத்தது.
வழக்கறிஞர் ஹென்றி திபேன் சார்பில், அஜித்குமார் காவல் துறையினரால் தாக்கப்படும் காணொளி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சமர்ப்பிக்கப்பட்டது. அஜித்குமார் பிரேதப் பரிசோதனை அறிக்கையை பிற்பகல் 3 மணிக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என்றுகூறி வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. மாஜிஸ்திரேட் அறிக்கையையும் பிற்பகலில் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.
பிரேதப் பரிசோதனை அறிக்கையை ஆய்வு செய்த பிறகு, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கொலை செய்யக்கூடியவர்கள்கூட இப்படி தாக்க மாட்டார்கள் எனத் தெரிவித்தது. வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவது குறித்து கேட்கப்பட்டது. இதற்கு அரசுத் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்படவில்லை.
இந்த வழக்கு விசாரணை அதிகாரியாக மதுரை மாவட்ட நீதிபதி சுந்தர்லால் சுரேஷ் நியமிக்கப்படுவதாகவும் ஜீலை 8-க்குள் இவர் முழுமையான விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இந்த வழக்கு ஜூலை 8 அன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
மேலும், சிபிசிஐடி மேற்கொள்ளும் விசாரணை தொடர்பாக ஜூலை 8-க்குள் விசாரணை நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.