ஆணையர் சரவண சுந்தர் - கோப்புப்படம் 
தமிழ்நாடு

கோவை காவல் நிலையத்தில் தற்கொலை சம்பவம்: காவல் ஆணையர் விளக்கம்! | Suicide

பணியில் இருந்த காவலருக்குத் தெரியாமல் முதல் மாடியில் இருக்கும் உதவி ஆய்வாளர் அறைக்கு அவர் சென்றுள்ளார்.

ராம் அப்பண்ணசாமி

கோவை மாநகரப் பகுதியில் உள்ள கடை வீதி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் அறையில் ஒரு நபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது தொடர்பாக மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் விளக்கமளித்துள்ளார்.

கோவை கடைவீதி காவல் நிலையத்தில் இன்று (ஆக. 6) காலை வழக்கமான ரோல் கால் பணி முடிந்தவுடன், முதல் மாடியில் உள்ள உதவி ஆய்வாளர் அறைக்கு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் சென்றுள்ளார்.

அப்போது கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது ஒரு நபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரியவந்தது. இதன் தொடர்ச்சியாக சம்மந்தப்பட்ட அறையின் கதவை உடைத்து காவல்துறையினர் உள்ளே நுழைந்தனர்.

அங்கு வேட்டியால் ஒரு நபர் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் இருந்தார். அந்த சடலத்தை காவல்துறையினர் மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பிவைத்தனர்.

சம்மந்தப்ப்பட்ட நபரின் உடையில் ஒரு டைரி இருந்துள்ளது. அதில் இருந்த தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, தற்கொலை செய்துகொண்ட நபர் சாமி செட்டிபாளையத்தைச் சேர்ந்த அறிவொளிராஜன் (60) என்பது தெரிய வந்தது.

கூலித் தொழிலாளியான இவர் மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாகவும், கடந்த சில நாள்களாக அடிக்கடி வீட்டை விட்டு வெளியேறியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று (ஆக. 5) வீட்டைவிட்டு வெளியேறி கடைவீதி காவல் நிலையத்துக்கு வந்து, யாருக்கும் தெரியாமல் உதவி ஆய்வாளர் அறைக்குச் சென்று அவர் தற்கொலை செய்துள்ளார்.

இது தொடர்பாக மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் கூறியதாவது,

`காவல் நிலையத்தின் வெளிப்பகுதியில் முதல் மாடிக்கு செல்வதற்காக ஒரு படிக்கட்டு பாதை உள்ளது. நேற்று இரவு சென்ட்ரிங் பணியில் ஒரு காவலர் இருந்திருக்கிறார்.

அவருக்கு தெரியாமல் இந்த நபர் முதல் மாடி படிக்கட்டு வழியாக உதவி ஆய்வாளர் அறைக்குச் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பணியில் கவனக்குறைவாக இருந்த காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.