மாதிரி படம் 
தமிழ்நாடு

இருவேறு சம்பவங்களில் குற்றவாளிகளைச் சுட்டுப்பிடித்த காவல் துறை!

காயமடைந்தவர்கள் கோவை மற்றும் நெல்லை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

கிழக்கு நியூஸ்

நெல்லை ஜாகிர் உசேன் மற்றும் ஈரோடு ரௌடி ஜான் கொலை தொடர்பாக குற்றவாளிகளைக் காவல் துறையினர் சுட்டுப்பிடித்துள்ளார்கள்.

ஈரோடு

சேலத்தைச் சேர்ந்த பிரபல ரௌடி ஜான் மனைவியுடன் திருப்பூர் நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தார். ஈரோடு மாவட்டம் பவானி அருகே கார் சென்றுகொண்டிருந்தபோது, மர்மக் கும்பல் ஒன்று ஜானின் கார் மீது மோதி விபத்தை உண்டாக்கியது.

விபத்தைத் தொடர்ந்து, சாலையில் கார் ஓரங்கட்டப்பட்டுள்ளது. அப்போது, விபத்தை உண்டாக்கிய காரிலிருந்து இறங்கிய மர்மக் கும்பல் மனைவியின் கண்முன்னே ஜானை சரமாரியாகத் தாக்கி படுகொலை செய்தது.

அந்தப் பகுதியில் சென்றுகொண்டிருந்தவர்கள் இந்தக் கொலையைப் படம்பிடிக்க, ஜான் கொலை செய்யப்பட்ட காணொளி சமூக ஊடகங்களில் அதிகளவில் பகிரப்பட்டது. ஜானைக் கொலை செய்துவிட்டு குற்றவாளிக் கும்பல் தப்பியோடியது.

சம்பவம் குறித்து தகவலறிந்த காவல் துறையினர், ஜானைக் கொலை செய்த கும்பலைத் தீவிரமாகத் தேடியது. 5 பேர் கொண்ட கும்பல் தேடப்பட்டு வந்த நிலையில், 4 பேர் கொண்ட கும்பல் காவல் துறையினரிடம் சிக்கியது. தப்பியோட முயற்சித்ததைத் தொடர்ந்து, காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி குற்றவாளிகளைப் பிடித்துள்ளார்கள். இதில் காயமடைந்ததைத் தொடர்ந்து, குற்றவாளிகள் அனைவரும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

திருநெல்வேலி

நெல்லை ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஜாகிர் உசேன் கொலையும் தமிழ்நாட்டை உலுக்கியுள்ளது. சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளிக்கும் அளவுக்கு இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கிலும் தேடப்பட்டு வந்த கிருஷ்ணமூர்த்தி என்கிற தௌபிக் என்பவர் காவல் துறையினரால் சுட்டுப்பிடிக்கப்பட்டுள்ளார். நெல்லையில் தலைமறைவாக இருந்த இவரைப் பிடிக்கச் சென்றபோது, தலைமைக் காவலர் ஒருவரைத் தாக்கியதாகவும் இதன்காரணமாகவே சுட்டுப்பிடிக்கப்பட்டதாகவும் காவல் துறை தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. காயமடைந்த தலைமைக் காவலர் மற்றும் சுட்டுப்பிடிக்கப்பட்ட கிருஷ்ணமூர்த்தி என்கிற தௌபிக் ஆகியோர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.