கோப்புப்படம்
கோப்புப்படம் 
தமிழ்நாடு

21 வயதுக்குக் கீழானவர்களின் திருமணத்துக்குப் பெற்றோர் ஒப்புதல் கட்டாயம்: பாமக தேர்தல் அறிக்கை

கிழக்கு நியூஸ்

மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாமக இன்று வெளியிட்டது.

மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள பாமக மொத்தம் 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கலும் இன்று பிற்பகல் நிறைவடைந்தன.

இதனிடையே, சென்னையில் இன்று கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பாமகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்கள்.

பாமக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

  • 2021-ம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்துவதற்கு பாமக வலியுறுத்தும்; வெற்றிபெறும்.

  • கல்வி, வேலைவாய்ப்பில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

  • கல்வி உள்ளிட்ட 5 துறைகளுக்கான அதிகாரங்கள் பொதுப்பட்டியலலிருந்து மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட பாமக பாடுபடும்.

  • உச்ச நீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க மத்திய அரசிடம் பாமக வலியுறுத்தும்.

  • வேளாண் விளைபொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க தனிச் சட்டம் நிறைவேற்றப்படும்.

  • மத்திய அரசில் வேளாண் துறைக்குத் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

  • வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 3,000 உரிமைத் தொகை வழங்கப்படும்.

  • மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

  • தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பை ரூ. 3 லட்சத்திலிருந்து ரூ. 7 லட்சமாக உயர்த்த மத்திய அரசை பாமக வலியுறுத்தும்.

  • சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க பாமக பாடுபடும்.

  • திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்தி, அந்த முயற்சியில் வெற்றி பெறுவோம்.

  • புதுச்சேரிக்குத் தனி மாநில அந்தஸ்தை வழங்கி மத்திய அரசை பாமக வலியுறுத்தும்.

  • மிக இளம் வயதில் நாடகக் காதலால் இளம்பெண்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்கவும், குடும்ப அமைப்பைக் காக்கும் வகையிலும், வளரிளம் பருவத்தினரின் எதிர்கால நலன் காக்கவும் 21 வயதுக்குக் கீழானவர்களின் திருமணத்திற்கு இருதரப்புப் பெற்றோரின் ஒப்புதலைக் கட்டாயமாக்க வழி செய்வோம்.