அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது என் முதல் தவறு, அவரைக் கட்சிக்குத் தலைவராக்கியது இரண்டாவது தவறு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பேசினார்.
பாட்டாளி மக்கள் கட்சியில் கடந்த 8 மாதங்களாக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையில் மோதல் போக்கு நிலவி வருகிறது. அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கிய ராமதாஸ், அடுத்தடுத்து மகள் காந்திமதிக்கு செயல் தலைவர் பதவியையும் கொடுத்துள்ளார். ராமதாஸ் மருத்துவமனையில் இருந்த போதும் கூட அன்புமணி சென்று பார்க்காதது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியது.
இதற்கிடையில் நேற்று (நவ.5) அன்று சேலம் அருகே ராமதாஸ் - அன்புமணி தரப்பினருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்பு பாமகவினரும் சரமாரியாகத் தாக்கிக் கொண்டனர். மேலும் சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் ராமதாஸ் ஆதரவாளருமான அருளின் கார் தாக்கப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
“அன்புமணியும் அவரது மனைவி சௌமியா அன்புமணியும் 46 ஆண்டு காலமாக ஒற்றுமையாக இருந்த சொந்தங்களை ஒன்று சேர்த்து, உயிரை விட மேலாக அவர்களை நான் மதித்துக் கட்சியை ஆரம்பித்து நடந்தி வந்தேன். நான் அரசியலில் சில தவறுகளைச் செய்ததுண்டு. அதில் ஒன்றுதான் அன்புமணியை மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக நியமித்தது. இரண்டாவது கட்சியின் தலைவர் பொறுப்பைக் கொடுத்தது. இப்படிப் பல தவறுகளைச் செய்து வந்ததோடு இப்போது அமைதியாக பாமகவை நடத்திக் கொண்டிருக்கும்போது அதில் ஒரு பிளவு ஏற்பட்டிருக்கிறது என்று மக்களும் பிற கட்சியினரும் நினைக்கும் அளவுக்கு அன்புமணியின் பேச்சும் செயலும் அறுவறுக்கத்தக்க அளவில் அமைந்திருக்கிறது. இதற்குக் காரணம், வளர்ப்பு சரியில்லை என்று கிசுகிசுப்பீர்கள்.
அந்த கும்பலிடம் இருக்கிற ஒரு சிலரை தவிர மற்றவர்கள் எல்லாம் ஏன் எல்லோருமே நான் வளர்த்த பிள்ளைகள். என்னை ஐயா என்று அன்போடு அழைத்த பிள்ளைகள். இன்று சில பல காரணங்களுக்காக அவர்கள் அங்கே போய் சேர்ந்து, அன்புமணியின் சொல்படி என்னைத் திட்டுவது, கௌரவத் தலைவரைத் திட்டுவது, என்னோடு ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள் அதிலே இரண்டு பேர் என்னோடு என்றும் இருக்கிறார்கள். அதிலே மூன்று பேர் அன்புமணி கும்பலோடு தெரியாமல் போய்விட்டார்கள். கட்சி என்றால் என்னைப் போல் நடத்த முடியாது என்று அன்புமணிக்குத் தெரியும். நான் தமிழ்நாட்டில் எத்தனையோ கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கிறேன். எந்தத் தலைவரும் என்னைப் பற்றியோ என் கட்சியைப் பற்றியோ அவதூறாகப் பேசியதில்லை. அன்புமணியும் அவரைச் சேர்ந்த கும்பலும் திருந்த வேண்டும்.” என்றார்.
PMK founder Ramadoss said, "Appointing Anbumani as a Union Minister was my first mistake; making him the party leader was my second mistake."