பாமக நிறுவனர் ராமதாஸ் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

பாமக கூட்டணி குறித்து ஆலோசிக்க டிச.30 பொதுக்குழு கூட்டம்: ராமதாஸ் | Ramadoss |

டிசம்பர் 12 அன்று 10.5% இடஒதுக்கீடு கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்....

கிழக்கு நியூஸ்

பாமக கூட்டணி குறித்து முடிவெடுக்க டிசம்பர் 30 அன்று பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கு சில மாதங்களாக மோதல் போக்கு நிலவுகிறது. கட்சியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இரு தரப்பும் முயன்று வருகின்றன. குறிப்பாக, கடந்த சில நாட்களுக்கு முன் அன்புமணி தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் 2026 வரை பாமக தலைவராக அன்புமணி தொடர்வார் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து ஆகஸ்ட் 17-ம் தேதி இதை எதிர்த்து ராமதாஸ் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடந்தது. அதில், அன்புமணி மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இதனால் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டு, தற்போது ராமதாஸ் தரப்பில் சில நிர்வாகிகளும், அன்புமணி ராமதாஸ் தரப்பில் சில நிர்வாகிகளும் பிரிந்து செயல்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. அதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் தலைவர் தீரன், பா.ம.க. பொதுச்செயலாளர் முரளி சங்கர், எம்.எல்.ஏ. அருள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ் கூறியதாவது:-

“டிசம்பர் 12 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளது. அந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. பல மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி விட்டார்கள். தமிழ்நாட்டிலும் நடத்தப்பட வேண்டும். தமிழ்நாட்டில் 324 சமுதாயங்கள் உள்ளன. அவர்களது உரிமைகளை வலியுறுத்தியும் சமூக நீதிக்காக பாமக போராட்டம் நடத்தும். பாமக யாருடன் கூட்டணி வைக்கப் போகிறது என்பது குறித்து கருத்து கேட்க டிசம்பர் 30 அன்று பொதுக்குழு கூட்டப்படும். அப்போது கூட்டணி பற்றிய விவரங்கள் அறிவிக்கப்படும்” என்றார்.

PMK founder Ramadoss said that a general committee meeting will be held on December 30 to decide on the PMK alliance.