கோப்புப்படம் ANI
தமிழ்நாடு

அன்புமணியைக் கட்சியிலிருந்து நீக்குவீர்களா?: ராமதாஸ் பதில்

"இதை எப்படி பார்க்கிறேன் என்பதை வியாழக்கிழமை சொல்கிறேன்"

கிழக்கு நியூஸ்

அன்புமணியை பாமகவிலிருந்து நீக்குவீர்களா என்ற கேள்விக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பதிலளித்துள்ளார்.

பாமகவில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையே பெரும் போர்க்களம் வெடித்து வருகிறது. அன்புமணி மீது கடந்த வியாழக்கிழமை பல்வேறு காட்டமான குற்றச்சாட்டுகளை அடுக்கினார் ராமதாஸ். இதற்குப் பெரிதளவில் அன்புமணி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ராமதாஸின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, சென்னையில் தொடர்ந்து மூன்று நாள்களாக பாமக நிர்வாகிகளைச் சந்தித்து வருகிறார் அன்புமணி. ஐயா ராமதாஸ் தான் நம் குலசாமி என்று அன்புமணி நேற்று பேசினார்.

இதனிடையே, விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் அன்புமணியைக் கட்சியிலிருந்து நீக்குவது உள்பட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.

கட்சி நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என அன்புமணி கூறியதை எப்படி பார்க்கிறீர்கள் எனக் கேட்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த ராமதாஸ், "இதை எப்படி பார்க்கிறேன் என்பதை வியாழக்கிழமை சொல்கிறேன்" என்றார்.

திலகபாமாவைக் கட்சியிலிருந்து நீக்குவதைப்போல அன்புமணியைக் கட்சியிலிருந்து நீக்குவீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார்கள். இதற்குப் பதிலளித்த ராமதாஸ், "இதுமாதிரி தேவையில்லாத கேள்வியை எல்லாம் கேட்க வேண்டாம்" என்றார்.

மேலும், தன்னை யாரும் இயக்க முடியாது என்றும் பின்னணியிலிருந்து இயக்குவது யார் என்ற கேள்விக்கு ராமதாஸ் பதிலளித்தார்.

தொடர்ந்து, பாமக நிர்வாகிகளுடனான மூன்றாவது நாள் சந்திப்புக் கூட்டத்தில் பேசிய அன்புமணி, "குழப்பங்கள் எல்லாம் உள்ளது. சில நாள்களில் இது சரியாகிவிடும். இதை மனதில் ஏற்றிக்கொள்ள வேண்டாம். நாம் வேகமாக முன்னேறுவோம். நிரந்தரத் தலைவர் என்று யாரும் கிடையாது. நம் கட்சி ஜனநாயகமான கட்சி. யார் தலைவர் என்பதைப் பொதுக்குழு தான் முடிவு செய்யும். பொதுக்குழுவால் யார் தேர்வு செய்யப்படுகிறாரோ அவர் தான் பொறுப்பில் இருப்பார். அதிகாரம் அவர்களுக்கு தான் உள்ளது. கையெழுத்து போடும் அதிகாரம் அவர்களுக்கு தான் உள்ளது. தேர்தல் ஆணையம் அவர்களுக்கு தான் அங்கீகாரம் வழங்கியிருக்கிறது" என்றார் அன்புமணி.