தமிழ்நாடு

மக்களை ஏமாற்றாமல் தமிழக அரசு பொங்கல் பரிசு வழங்கவேண்டும்: ராமதாஸ்

நிதி நெருக்கடி, மத்திய அரசு நிதி வழங்கவில்லை போன்ற காரணங்களைக் கூறி மக்களுக்கான உரிமைகளை அரசு மறுக்கக்கூடாது.

ராம் அப்பண்ணசாமி

மக்களை ஏமாற்றாமல் தமிழக அரசு பொங்கல் பரிசு வழங்கவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளனர்.

சென்னை, தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் மற்றும் அதனைத் தொடர்ந்து ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்திய பாதிப்புகளுக்காக, சுமார் ரூ. 2852 கோடி நிதியை தமிழக அரசு நிவாரணப் பணிகளுக்கு செலவிட்டுள்ளதை அடுத்து, அரசுக்குக் கடுமையான நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பொங்கல் பரிசுத் தொகையுடன் ரூ. 1000 பொங்கல் பரிசு வழங்கப்படாது என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (டிச.29) தகவல் தெரிவித்தார்.

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு,

2025 பொங்கலை ஒட்டி, ஒரு கிலோ அரிசி, சர்க்கரை ஆகியவற்றுடன் ஒரு முழுக் கரும்பும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், கடந்த இரு ஆண்டுகளாக பொங்கல் பரிசுத் தொகுப்பில் மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ. 1000 இந்த முறை காணாமல் போயிருக்கிறது.

மக்களை ஏமாற்றும் வகையிலான இந்த அறிவிப்பு கண்டிக்கத்தக்கது. 2024-ல் தேர்தல் வந்ததால் அந்த ஆண்டும், அதற்கு முந்தைய ஆண்டும் ரூ. 1000 பணம் கொடுத்த தமிழக அரசு, 2025-ல் தேர்தல் இல்லை என்பதால் பணம் வழங்கவில்லை என்று தெரிகிறது.

2026-ல் தேர்தல் வரும் என்பதால், அப்போது ரூ. 1000 வழங்கி மக்களை ஏமாற்றிவிடலாம் என்று தமிழக அரசு நினைக்கிறது. இது மக்களை முட்டாள்களாக்கும் செயல். நிதி நெருக்கடி, மத்திய அரசு நிதி வழங்கவில்லை போன்ற காரணங்களைக் கூறி மக்களுக்கான உரிமைகளை அரசு மறுக்கக்கூடாது.

கடந்த சில மாதங்களில் பெய்த கடுமையான மழையாலும், வெள்ளத்தாலும் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீடு வழங்கப்படவில்லை.

இத்தகைய சூழலில் மக்கள் பொங்கலை ஓரளவாவது மகிழ்ச்சியாகக் கொண்டாட பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ. 1000 வழங்கப்பட வேண்டும். எனவே பொங்கல் தொகுப்புடன் ரூ. 1000 சேர்த்து வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்’ என்றார்.