பாமகவுக்குள் உட்கட்சிப் பூசல் வலுத்து வரும் நிலையில், இரு தரப்பினரும் ஒற்றுமையாக இருப்பதையே தான் விரும்புவதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் கடந்த சில மாதங்களாகவே கட்சி யாருக்குச் சொந்தம் என்பதில் உரிமைப் போர் நீடித்து வருகிறது. தேர்தல் ஆணையம் அண்மையில் கடிதம் ஒன்றை அனுப்பி இருப்பது மேலும் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. ஏற்கெனவே பாமகவில் உள்ள 5 எம்.எல்.ஏக்களில் ஜி.கே.மணி, சேலம் அருள் ஆகியோர் ராமதாஸ் பக்கமும், தருமபுரி வெங்கடேஸ்வரன், மைலம் சிவக்குமார், மேட்டூர் சதாசிவம் ஆகியோர் அன்புமணிக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறார்கள்.
இதற்கிடையில், தமிழகம் முழுவதும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3502 கோடி அளவுக்கு வங்கிக் கடன் இணைப்பு மற்றும் அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்வின் ஒரு பகுதியாக இன்று (செப்.16) சேலத்தில் வங்கிக்கடன் இணைப்பு மற்றும் அடையாள அட்டைகளை வழங்கும் விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பாமக எம்.எல்.ஏ.க்கள் சேலம் அருள், மேட்டூர் சதாசிவம் ஆகியோர் திமுக அரசை பாராட்டி பேசினர். அதன் பின்னர் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
அவர் கூறியதாவது, “ சேலம் மாவட்டத்திற்கு திமுக அரசு பல்வேறு திட்டங்களை செய்துள்ளதற்கு நன்றி என்று பாமகவின் சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருள், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் ஆகியோர் போட்டி போட்டுக் கொண்டு திமுக அரசை பாராட்டினார்கள். ஆனால் ஒற்றுமையுடன் பாராட்டினார்கள். அவர்கள் நமது கூட்டணி கட்சி கூட இப்போது கிடையாது. இருவரும் எப்போதும் இதே ஒற்றுமையுடன் அவர்கள் இருக்க வேண்டும். சிறப்பாக மக்கள் பணியாற்ற வேண்டும் என்று நான் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.