ANI
தமிழ்நாடு

பிரதமர் மோடியின் தியானம் நிறைவு

கிழக்கு நியூஸ்

கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டு வந்த தியானம் நிறைவடைந்துள்ளது.

வியாழக்கிழமை இரவு 7 மணிக்குத் தொடங்கிய தியானம் சுமார் 45 மணி நேரத்துக்குப் பிறகு இன்று பிற்பகல் 3 மணியளவில் நிறைவடைந்தது.

மக்களவைத் தேர்தலுக்கான கடைசிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் வியாழக்கிழமை மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.

இதனிடையே, கடந்த வியாழக்கிழமை மாலை திருவனந்தபுரத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தார் பிரதமர் மோடி. விவேகானந்தர் மண்டபத்தில் மூன்று நாள்கள் தியானம் மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் தியானத்தைத் தொடங்கினார்.

இடையில் பிரதமர் மோடி தியானம் மேற்கொண்ட புகைப்படங்கள், உதயசூரியனை வழிபட்ட புகைப்படங்கள் வெளியாகின.

இந்த நிலையில், சுமார் 45 மணி நேரத்துக்குப் பிறகு இன்று பிற்பகல் 2.45 மணியளவில் பிரதமர் மோடி தனது தியானத்தை முடித்துக்கொண்டு மண்டபத்திலிருந்து வெளியே வந்தார். இதைத் தொடர்ந்து, 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மாலை அணிவித்து பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

இதை முடித்துக்கொண்டு, கன்னியாகுமரியிலுள்ள அரசு விருந்தினர் மாளிகை செல்லும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார்.