கோப்புப்படம் ANI
தமிழ்நாடு

பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகை?

பிரதமரின் வருகைக்கு முன்பு தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி இறுதி செய்யப்படலாம் எனத் தகவல்

கிழக்கு நியூஸ்

பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 18-ம் தேதி தமிழ்நாடு வரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் என்ற தலைப்பில் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நடைப்பயணம் பிப்ரவரி 18-ம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நிறைவடையவுள்ளதாகத் தெரிகிறது.

நிறைவு விழாவில் பங்கேற்பதற்காகப் பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விழாவுக்கு முன்பு தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி இறுதி செய்யப்பட்டு, கூட்டணிக் கட்சிகளுடைய தலைவர்கள் பிரதமர் மோடி பங்கேற்கும் இந்த விழாவில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய இரு தேர்தல்களில் பாஜகவுடன் கூட்டணியிலிருந்த அதிமுக, இந்தத் தேர்தலில் பாஜகவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்கிற நிலைப்பாட்டில் மிகவும் உறுதியாக உள்ளது. வரும் நாள்களில் பாஜக தரப்பிடமிருந்து கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் தொடங்கப்படுவதற்கான வாய்ப்புள்ளது.

இந்த மாதத்திலேயே இரு முறை தமிழகம் வந்த பிரதமர் மோடி, இரு மாதங்களில் மூன்றாவது முறையாக பிப்ரவரியிலும் தமிழகம் வருகிறார்.