தமிழ்நாடு

மக்களின் உணர்வுகளை மதிக்காதவர் அரசுப் பொறுப்பிலிருப்பது கவலையளிக்கிறது: பிரதமர் மோடி

சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு, விளைவுகளை அறிந்திருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியது.

கிழக்கு நியூஸ்

மக்களின் உணர்வுகளைக் கொஞ்சம்கூட மதிக்காத ஒருவர் இன்னும் தமிழ்நாடு அரசின் முக்கியப் பதவியில் இருப்பது கவலையளிக்கக்கூடியது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஒரு நாள் பயணமாக தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி, சென்னை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கல்பாக்கம் சென்றார். கல்பாக்கத்தில் ஈனுலை மின் உற்பத்தித் திட்டத்தைத் தொடக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, விமான நிலையத்திலிருந்து கார் மூலம் புறப்பட்டு மாலை 6 மணியளவில் நந்தனத்திலுள்ள ஒய்எம்சிஏ மைதானத்தை வந்தடைந்தார்.

இந்தப் பொதுக்கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் பிரதமரை வரவேற்றார்கள். ஜி.கே. வாசன், பாரிவேந்தர், ஏ.சி. சண்முகம், ஜான் பாண்டியன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றார்கள்.

எல். முருகனும், அண்ணாமலையும் தொடக்கத்தில் உரையாற்றினார்கள். இவர்களைத் தொடர்ந்து, பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து விமர்சித்தார்.

அவர் கூறியதாவது:

"குடும்ப அரசியலைச் சேர்ந்த ஒருவர், தேசத்தையும் மக்களையும் அடிமைகளாகக் கருதுகிறார்கள். பதவிக்கான கண்ணியத்தை மறந்துவிடுகிறார்கள். இதை விளையாட்டாகக் கடந்து செல்கிறார்கள்.

திமுக குடும்பத்தைச் சேர்ந்த ஓர் அமைச்சரிடத்தில் உச்ச நீதிமன்றம் கடுமையான வினாக்களை எழுப்பியிருக்கிறது. கோடிக்கணக்கான நம்பிக்கையைக் கொச்சைப்படுத்தி, காலில்போட்டு மிதித்து அவமானம் செய்வதுகூட குடும்ப அரசியல் செய்பவர்களின் அடையாளம்.

தங்களுடைய அதிகாரம், அகங்காரம், மமதை காரணமாக, மக்களின் உணர்வுகளைக் கொஞ்சம்கூட மதிக்காத ஒருவர் இன்னும் தமிழ்நாடு அரசின் முக்கியப் பதவியில் இடம்பெற்றிருக்கிறார். இது கவலையளிக்கக் கூடிய விஷயம்" என்றார்.

முன்னதாக, சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியது தொடர்புடைய பல்வேறு வழக்குகளை ஒன்றிணைப்பது குறித்து உச்ச நீதிமன்றத்தை உதயநிதி ஸ்டாலின் நாடினார். அப்போது, "மதச் சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது, பிறகு சட்டப்பிரிவு 32-ன் கீழ் பாதுகாப்பு கோரி உச்ச நீதிமன்றத்தை நாடுவது. நீங்கள் பேசியதன் விளைவுகள் என்ன என்பது உங்களுக்குத் தெரியாதா?. நீங்கள் சாதாரண மனிதரல்ல, ஓர் அமைச்சர். பேசியதன் விளைவுகளை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்" என்று உச்ச நீதிமன்றம் அவரை சாடியது.