விழாவில் பேசிய பிரதமர் மோடி 
தமிழ்நாடு

10 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு ரூ. 3 லட்சம் கோடி வழங்கியுள்ளோம்: பிரதமர் மோடி | Modi | Tuticorin

தமிழ்நாட்டில் இன்று தொடங்கி வைக்கப்பட்ட ரயில்வே திட்டங்களால், தென் தமிழகத்தின் லட்சக்கணக்கான மக்கள் பயனடைவார்கள்.

ராம் அப்பண்ணசாமி

தூத்துக்குடியில் இன்று ரூ. 4,900 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை துவக்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு ரூ. 3 லட்சம் கோடி வழங்கியுள்ளதாகப் பேசியுள்ளார்.

மாலத்​தீ​வில் இருந்து இந்​திய விமானப் படைக்குச் சொந்​த​மான தனி விமானத்​தில் இன்று இரவு 7 மணி​யள​வில் தூத்​துக்​குடி விமான நிலை​யத்​துக்கு வரு​கை தந்தார் பிரதமர் நரேந்திர மோடி. 

ரூ. 452 கோடி செலவில் தூத்துக்குடி விமான நிலையத்தில் பல்வேறு வசதிகளுடன் கூடிய புதிய பயணியர் முனையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதை பயன்பாட்டிற்குக்கொண்டு வரும் வகையில் தூத்துக்குடியில் நடைபெற்ற திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.

தூத்துக்குடி விமான நிலைய புதிய முனையம், வ.உ.சி. துறைமுகத்தில் சரக்கு கையாளும் திறனை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வடக்கு சரக்கு தளம் III, சேத்தியாதோப்பு - சோழபுரம் நான்கு வழிச்சாலை, தூத்துக்குடி துறைமுக ஆறு வழிச்சாலை, நாகர்கோவில் நகரம் - நாகர்கோவில் சந்திப்பு - கன்னியாகுமரி பாதையை இரட்டிப்பாக்குதல், ஆரல்வாய்மொழி - நாகர்கோவில் சந்திப்பு மற்றும் திருநெல்வேலி - மேலப்பாளையம் ரயில் பாதையை இரட்டிப்பாக்குதல், மதுரை - போடிநாயக்கனூர் ரயில் பாதையை மின்மயமாக்குதல் ஆகிய முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார் பிரதமர் மோடி.

அத்துடன் தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் மற்றும் புதுச்சேரி பயன்பெறும் வகையில் கூடங்குளம் அணுமின் நிலைய அலகு 3 மற்றும் 4-ல் இருந்து மின்சாரத்தை கொண்டு செல்வதற்கான எரிசக்தி பரிமாற்ற வசதிக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

இந்த விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது,

`வணக்கம், இன்று கார்கில் வெற்றித் திருநாள், நான் கார்கில் வீரர்களுக்குத் தலை வணங்குகிறேன், உயிரைத் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். நான்கு நாள் வெளிநாடு சுற்றுப் பயணத்திற்குப் பிறகு, கடவுள் ராமநாதசுவாமியின் புனிதமான மண்ணில் நேரடியாக கால் பதிக்கும் பாக்கியம் எனக்கு வாய்த்திருக்கிறது.

இந்தியா மீது உலகத்திற்கு நம்பிக்கை அதிகரித்திருக்கிறது. நாம் வளர்ச்சியடைந்த பாரதத்தையும், வளர்ச்சியடைந்த தமிழகத்தையும் படைப்போம். தெய்வங்களின் நல்லாசியோடு தூத்துக்குடியின் வளர்ச்சிப் பணியில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டு வருகிறது.

2014-ம் ஆண்டு தமிழ்நாட்டை வளர்ச்சியின் சிகரத்திற்கு கொண்டு செல்லும் குறிக்கோளுடனான பயணம் தொடங்கப்பட்டது. அதன் சாட்சியாக தூத்துக்குடி மாறிக்கொண்டிருக்கிறது.

கடந்த செப்டம்பரில் புதிய தூத்துக்குடி சர்வதேச சரக்குப் பெட்டி முனையத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தேன். ஆழ்கடல் பகுதியில் சுதேசி கப்பல்களை செலுத்தி ஆங்கிலேயர்களுக்கு சாவல்விட்டார் வ.உ.சி. பாரதிக்கு தூத்துக்குடியுடன் உள்ள உறவு, எனது சொந்த தொகுதியான காசிக்கும் உள்ளது.

இங்கிலாந்து நாட்டுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், இந்தியாவின் பொருளாதாரத்திற்கு புதிய உத்வேகம் அளிக்கும். தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மீதம் இந்திய பொருள்களை இங்கிலாந்தில் குறைந்த விலையில் வாங்கலாம். இந்தியாவில் தயாரிக்கப்படும் 99% பொருள்களை இங்கிலாந்தில் வரி இல்லாமல் விற்க முடியும்.

தேசத்தின் தொழில் வளர்ச்சியில் ரயில் உள்கட்டமைப்புகள் முக்கியம் என்று எங்களது அரசு கருதுகிறது. அதன் காரணமாக பல்வேறு ரயில் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறோம். எங்கள் அரசின் ரயில் கட்டமைப்பு சார்ந்த திட்டங்களில் தமிழ்நாடு முக்கிய இடத்தில் உள்ளது.

தேசத்தின் முதல் செங்குத்து ரயில் தூக்கு பாலம் தமிழகத்தின் பாம்பனில் கட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று தொடங்கி வைக்கப்பட்ட ரயில்வே திட்டங்களால், தென் தமிழகத்தின் லட்சக்கணக்கான மக்கள் பயனடைவார்கள். தமிழகத்தின் வளர்ச்சி, மேம்பட்ட தமிழகம் என்ற கனவுக்கு உறுதிபூண்டுள்ளோம்.

தமிழகத்தின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து வந்துள்ளோம். கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்துக்கு ரூ. 3 லட்சம் கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது தமிழகத்துக்கு கிடைத்த நிதியை காட்டிலும் மூன்று மடங்கு கூடுதல் நிதியை கடந்த 10 ஆண்டுகளில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வழங்கியுள்ளது.

கடந்த 11 ஆண்டுகளில் 11 புதிய மருத்துவ கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. உங்களிடம் கரைபுரண்டு ஓடும் உற்சாகத்தை காண்கிறேன். உற்சாகத்தின் வெளிப்பாடாக உங்களின் கைப்பேசிகளில் ஒளியைக் காட்டுங்கள். வணக்கம்’ என்றார்.