தமிழ்நாடு

சாம்பியன்களை உருவாக்கும் பூமி தமிழ்நாடு: 'கேலோ இந்தியா' தொடக்க விழாவில் பிரதமர் மோடி

கிழக்கு நியூஸ்

6-வது கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடக்கி வைத்தார்.

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளைத் தொடக்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையார் தளத்துக்குச் சென்றார். அங்கிருந்து சாலை மார்க்கமாக நேரு விளையாட்டரங்குக்குச் சென்றார். நேரு விளையாட்டரங்கில் முதல்வர் மு.க. ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பிரதமர் மோடியை வரவேற்றார்கள். உதயநிதி ஸ்டாலின் மாபெரும் தமிழ்க் கனவு நூலின் ஆங்கில வடிவத்தைப் பிரதமருக்கு வழங்கினார்.

இந்த விழாவில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், முதல்வர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவி, மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள்.

உதயநிதி ஸ்டாலின் வரவேற்புரை ஆற்றினார்.

இவரைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர், முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்கள். இவர்களது உரையைத் தொடர்ந்து, தூர்தர்ஷன் தமிழ் சேனலின் லோகோவை (Logo) பிரதமர் மோடி வெளியிட்டார்.

இதன்பிறகு, கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளைப் பிரதமர் மோடி சுடர் ஏற்றி தொடக்கி வைத்தார்.

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளைத் தொடக்கி வைத்த பிறகு வணக்கம் சென்னை என்று கூறி பிரதமர் மோடி தனது உரையைத் தொடங்கினார்.

உரையில் அவர் கூறியதாவது:

நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னை வந்துள்ள தடகள வீரர்கள் மற்றும் விளையாட்டுப் பிரியர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இங்கிருப்பது ஒரே பாரதம், உன்னத பாரதம் என்பதன் உண்மையான உணர்வை வெளிப்படுத்துகிறது. தமிழ்நாட்டின் அன்பு நிறைந்த மக்களும், அழகான தமிழ் மொழியும், கலாசாரமும் உங்களுக்கு தாய்மண் உணர்வை நிச்சயமாகத் தரும். விளையாட்டில் சாம்பியன்களை உருவாக்கும் பூமி, தமிழ்நாடு.

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள், இளையோர் விளையாட்டுப் போட்டிகள், கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள், கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகள், கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டிகள் போன்றவை விளையாடுவதற்கான வாய்ப்பை உருவாக்குவது மட்டுமில்லாமல் புதிய திறமைகளை வெளிக்கொண்டு வருகிறது. தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தை கேலோ விளையாட்டில் கொண்டு வந்ததற்கு நன்றி என்றார்.

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் ஜனவரி 19 முதல் 31 வரை சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோவை ஆகிய 4 நகரங்களில் நடைபெறுகிறது. கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் தென்னிந்தியாவில் நடைபெறுவது இதுவே முதன்முறை. இந்த விளையாட்டுப் போட்டிகளில் நாடு முழுவதிலுமிருந்து 5,500 தடகள வீரர்கள் பங்கேற்கிறார்கள்.