தமிழ்நாடு

ராஜேந்திர சோழன் வெற்றிப் பயண நினைவு நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி வழிபாடு! | PM Modi

தனி ஹெலிகாப்டர் மூலம் கங்கைகொண்ட சோழபுரத்துக்கு வந்தடைந்துள்ளார் பிரதமர் மோடி.

கிழக்கு நியூஸ்

திருச்சியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் வந்த பிரதமர் நரேந்திர மோடி கங்கைகொண்ட சோழபுரத்தில் சாமி தரிசனம் செய்தார்.

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் விழா, கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயில்கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா என முப்பெரும் விழா மத்திய கலாசாரத் துறை சார்பில் ஜூலை 23-ல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த விழாவின் நிறைவு நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதற்காக இன்று காலை திருச்சியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் நண்பகல் 12 மணியளவில் கங்கைகொண்ட சோழபுரம் வந்தடைந்தார் பிரதமர் மோடி.

சிறிது ஓய்வுக்குப் பிறகு சாலைப் பேரணி மேற்கொண்டார் பிரதமர் மோடி. சாலையின் இருபுறமும் மக்கள் அவருக்கு மலர்தூவி வரவேற்பளித்தார்கள்.

இதைத் தொடர்ந்து, ஆடித் திருவாதிரை விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சியை பிரதமர் மோடி பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து, கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் பிரதமர் மோடிக்கு சாமி தரிசனம் செய்து வழிபட்டார். சாமி தரிசனத்துக்குப் பிறகு இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பிரதமர் மோடி இதைப் பார்வையிட்டார்.

இளையராஜாவின் இசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து, தென்கிழக்கு ஆசிய நாடுகள் மீது ராஜேந்திர சோழன் படையெடுக்கச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.

இந்த விழாவில் மத்திய கலாசாரத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், மத்திய இணையமைச்சர் எல். முருகன், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன், தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி இரு நாள்கள் பயணமாக நேற்று (சனிக்கிழமை) தமிழ்நாடு வந்தார். மாலத்தீவிலிருந்து நேற்றிரவு (சனிக்கிழமை இரவு) 7 மணியளவில் தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்தார். ரூ. 452 கோடி செலவில் தூத்துக்குடி விமான நிலையத்தில் பல்வேறு வசதிகளுடன் கூடிய புதிய பயணியர் முனையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரும் வகையில் திறப்பு விழாவில் அவர் பங்கேற்றார்.

தூத்துக்குடி விமான நிலைய புதிய முனையம் உள்பட பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகளைப் பிரதமர் மோடி தொடக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாடிய பிறகு, திருச்சி சென்றடைந்தார். திருச்சி விமான நிலையில் அமைச்சர்கள் கே.என். நேரு, தங்கம் தென்னரசு, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், உள்ளிட்டோர் பிரதமர் மோடியை வரவேற்றார்கள். திருச்சியில் ராஜா காலனி பகுதியில் இருந்த தனியார் நட்சத்திர தங்கும் விடுதியில் பிரதமர் மோடி நேற்றிரவு தங்கினார்.

திருச்சியிலிருந்து கங்கைகொண்ட சோழபுரம் புறப்படும் முன் பிரதமர் மோடி சாலைப் பேரணியும் மேற்கொண்டார்.

PM Modi | Rajendra Cholan | Ariyalur | Gangaikonda Cholan |