தமிழ்நாடு

அதிகார ஆணவத்தில் திமுக: பிரதமர் மோடி விமர்சனம்

கிழக்கு நியூஸ்

திமுகவை வீட்டுக்கு அனுப்புவதற்கான உத்வேகம் பாஜகவிடம் மட்டுமே இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கோவையில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இருநாள் பயணமாக நேற்று தமிழ்நாடு வந்தார். சென்னை தியாகராய நகரில் நேற்று மாலை சாலைப் பேரணி மூலம் தென் சென்னை வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் பி. செல்வம், வடசென்னை வேட்பாளர் பால் கனகராஜ் ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

இதைத் தொடர்ந்து, இன்று காலை வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஏ.சி. சண்முகம் (வேலூர்), கே. பாலு (அரக்கோணம்), சௌமியா அன்புமணி (தருமபுரி), கே.எஸ். நரசிம்மன் (கிருஷ்ணகிரி), அஸ்வத்தாமன் (திருவண்ணாமலை), கணேஷ் குமார் (ஆரணி) ஆகிய 6 வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.

இந்த பிரசாரத்தை முடித்துக்கொண்டு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சென்ற பிரதமர் மோடி கோவை, நீலகிரி, பொள்ளாச்சி, திருப்பூர் ஆகிய நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

பொதுக்கூட்டத்தில் பிரதமர் பேசியதாவது:

"அன்பார்ந்த தமிழ் சகோதர, சகோதரிகளே, வணக்கம்!

இவ்வளவு அழகான தேயிலைத் தோட்டங்கள் உள்ள பகுதிகளுக்கு வந்தால், ஒரு 'டீ' கடைக்காரருக்கு மகிழ்ச்சியாகத்தானே இருக்கும். தமிழ்ப் புத்தாண்டுக்கு முன்கூட்டியே வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும், பாஜகவின் ஆதிக்கம் தெரிகிறது. திமுகவுக்கு விடைகொடுத்து வீட்டுக்கு அனுப்புகிற ஓர் உத்வேகம் பாஜகவுக்கு மட்டும்தான் உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியால் மட்டுமே இது சாத்தியம் என மொத்த தமிழ்நாடும் சொல்கிறது.

திமுக, காங்கிரஸ் போன்ற வம்சாவளி பாரம்பரிய கட்சிகளுக்கு ஒரேயொரு குறிக்கோள்தான் உள்ளன. இவர்களுக்குப் பொய் சொல்லி மக்களை ஏமாற்றி தொடர்ந்து ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதுதான் இவர்களது குறிக்கோள்.

வறுமையை ஒழிப்போம் என அடிக்கடி சொல்வார்கள். இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தபோதிலும், வறுமை ஒழியவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் 25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளோம்.

காங்கிரஸ், திமுக இண்டியா கூட்டணி பல தலைமுறைகளாகத் தொடர்ந்து ஆட்சியில் இருந்து வருகிறார்கள். இவர்கள் கோடிக்கணக்கான ஏழைகள், பட்டியலின சகோதரர்கள், தலித் மக்களுக்கு வீடு, மின்சாரம், குடிநீர் கிடைக்க விடாமல் தவிக்கவிட்டார்கள். காரணம், இவர்களுக்கு இவை எதுவும் கிடைத்துவிடக் கூடாது என்பதுதான் இண்டியா கூட்டணியின் அடிப்படை எண்ணம்.

முதல்முறையாக பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்த்தி அழகு பார்த்தது பாஜக அரசு. அதற்குக் கூட அவர்கள் ஆதரவு தராமல் எதிர்ப்பைத் தான் தெரிவித்தார்கள்.

காங்கிரஸும், திமுகவும் பிரிவினைவாதம் என்கிற ஆபத்தான விளையாட்டை விளையாடி வருகின்றன. எதிர்ப்பு அரசியல், வெறுப்பு அரசியல் தவிர்த்து எதையும் அவர்கள் செய்யவில்லை.

சுரண்டல், ஊழலின் மறுபெயர்தான் திமுக. 5ஜி-யில் இந்தியா உலக சாதனை படைத்து வருகிறது. ஆனால், திமுக 2ஜியில் ஊழல் செய்து நாட்டை அவமானப்படுத்தியது. ஊழலை அகற்றுவோம், ஊழல்வாதிகளைத் தண்டிப்போம் என்று நாங்கள் சொல்கிறோம். அவர்கள் ஊழலை ஆதரிப்போம், ஊழல்வாதிகளை ஆதரிக்கிறோம் என்கிறார்கள்.

திமுக எப்போதும் அதிகார ஆணவத்தில் மிதந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு கலாசாரத்துக்கு எதிரானது இந்த ஆணவம். நாட்டிலிருந்து ஊழல், வம்சாவளி அரசியல், போதைப்பொருளை வெளியேற்றுவதற்கான தேர்தல் இது" என்றார் பிரதமர் மோடி.