தமிழ்நாடு

ஊழல் செய்ய திமுக காப்புரிமை வைத்துள்ளது: வேலூரில் பிரதமர் மோடி பிரசாரம்

கிழக்கு நியூஸ்

ஊழல் செய்ய திமுக காப்புரிமை வைத்துள்ளதாக வேலூரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 9 நாள்களே உள்ள நிலையில், தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளன. பிரதமர் நரேந்திர மோடி இருநாள் பயணமாக மஹாராஷ்டிரத்திலிருந்து தனி விமானம் மூலம் நேற்று தமிழ்நாடு வந்துள்ளார். மாலை 6 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் வரவேற்றார்கள்.

சென்னை தியாகராய நகரில் தென் சென்னை வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் பி. செல்வம், வடசென்னை வேட்பாளர் பால் கனகராஜ் ஆகியோரை ஆதரித்து பிரதமர் மோடி சாலைப் பேரணி மேற்கொண்டார். பனகல் பூங்கா பகுதியிலிருந்து தொடங்கிய சாலைப் பேரணி அரைமணி நேரத்துக்கும் மேல் சுமார் 2 கி.மீ. தூரத்துக்கு தேனாம்பேட்டை வரை நீண்டது. பேரணியை முடித்துக்கொண்டு நேற்றிரவு ஆளுநர் மாளிகையில் பிரதமர் தங்கினார்.

இதைத் தொடர்ந்து, வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து இன்று காலை புறப்பட்ட பிரதமர் மோடி சுமார் 10 மணியளவில் வேலூர் சென்றடைந்தார்.

பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஏ.சி. சண்முகம் (வேலூர்), கே. பாலு (அரக்கோணம்), சௌமியா அன்புமணி (தருமபுரி), கே.எஸ். நரசிம்மன் (கிருஷ்ணகிரி), அஸ்வத்தாமன் (திருவண்ணாமலை), கணேஷ் குமார் (ஆரணி) ஆகிய 6 வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.

பிரசார பொதுக்கூட்ட மேடையில் பிரதமர் மோடி பேசியதாவது:

"அன்பார்ந்த தமிழ் சகோதர, சகோதரிகளே! வணக்கம்!

2024 தமிழ் புத்தாண்டுக்கு என வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். வரும் ஆண்டு வளர்ச்சிக்கான சிறப்பான ஆண்டாக அமையட்டும்.

வேலூரில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஏற்கெனவே ஒரு பெரிய புரட்சியை நடத்தியிருக்கிறது. இந்த வேலூர் மண் மீண்டும் ஒரு வரலாற்று நிகழ்வைக் காணப்போகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் வளமான இந்தியாவுக்கான அடித்தளத்தைத் தயார் செய்து வைத்துள்ளோம். 2014-க்கு முன்பு உலகளவில் பொருளாதாரத்தில் பலவீனமான நாடாக இந்தியா இருந்தது. மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்து மட்டுமே செய்திகள் வந்துகொண்டிருந்தன. இந்தியப் பொருளாதாரம் என்றைக்கு வீழ்ச்சியடையும் என்று உலக நாடுகள் பேசும் நிலையில் முந்தைய அரசாங்கம் செயல்பட்டு வந்தது.

உதான் திட்டத்தின் கீழ் வேலூர் விமான நிலையப் பணிகள் விரைவில் நிறைவு பெறும்.

திமுக இன்னும் பழைய சிந்தனையில் உள்ளது. பழைய அரசியலைச் செய்து நம்மை சிக்கவைக்க முயற்சிக்கிறது. ஒட்டுமொத்த திமுகவும் குடும்ப சொத்தாக நிறுவனமாக மாறியிருக்கிறது. திமுகவின் குடும்ப அரசியலால் தமிழக இளைஞர்கள் முன்னேறுவதற்கு வாய்ப்பு கிடைப்பதில்லை.

திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட மூன்று தகுதிகள் தேவை. பெரிய அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும், இரண்டாவது ஊழல் செய்ய வேண்டும், மூன்றாவது தமிழ்க் கலாசாரத்தை எதிர்க்க வேண்டும்.

ஊழல் செய்ய திமுக காப்புரிமை வைத்துள்ளது. கடந்த இரு ஆண்டுகளில் ரூ. 4,600 கோடி அளவில் இழப்பீடு ஏற்படும் அளவுக்கு மணல் கொள்ளை நடந்துள்ளது. மத்திய அரசு வளர்ச்சிக்காக அனுப்பும் நிதியை திமுக ஊழலுக்குப் பயன்படுத்துகிறது.

தமிழ்நாட்டில் போதைப் பொருள் கடத்தும் கும்பல் திமுகவின் பாதுகாப்பில் உள்ளது. இந்தத் தேர்தலில் மக்கள் இதற்குத் தக்க பாடத்தைப் புகட்டுவார்கள்.

திமுக பிரித்தாளும் அரசியலைச் செய்கிறது. மொழி, மதம், ஜாதியின் அடிப்படையில் பிரித்தாளுகின்றனர். பிரித்தாளும் சூழ்ச்சியை மக்கள் புரிந்துகொண்டவுடன் திமுக செல்லாக்காசாகிவிடும்.

காங்கிரஸ் ஆட்சியில் கட்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டார்கள். எந்த அமைச்சரவையில், யாருடைய நலனுக்காக இது தாரைவார்த்துக் கொடுத்தது என்பது மக்களுக்குத் தெரியும். ஆனால், இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மௌனம் காத்து வருகிறது. காங்கிரஸும், திமுகவும், மீனவர்கள் மீது பொய்யான அனுதாபத்தைக் காட்டி வருகிறது. இதனால் தான் தமிழ் மீனவர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.

கடந்த 10 ஆண்டுகளில் மீனவர்களை இலங்கையிலிருந்து விடுவிப்பதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பல்வேறு வகையில் நடவடிக்கை எடுத்துள்ளது. அதுமட்டுமில்லாமல், தூக்குத் தண்டனை பெற்ற 5 தமிழ் மீனவர்களை, தண்டனையிலிருந்து காப்பாற்றி தாயகம் அழைத்து வந்துள்ளேன்.

தமிழ்நாடு பெண் சக்திகளை வழிபடுகின்ற மண்ணாக உள்ளது. ஆனால், இண்டியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பெண்களை அவமதிக்கிறார்கள்.

திமுகவும், காங்கிரஸும் பெண்களை அவமதிக்கும் கூட்டணியாக உள்ளார்கள். ஜெயலலிதாவை இவர்கள் எப்படி மோசமாகப் பேசினார்கள், நடத்தினார்கள் என்பது நமக்குத் தெரியும். இன்றைக்கும் திமுக தலைவர்கள் பெண்களை இழிவுபடுத்தி பேசி வருகிறார்கள்.

பாஜகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியும் பெண் சக்திகளைப் பாதுகாப்பது மட்டுமில்லாமல், பெண்களுக்கான மரியாதையை மீட்டுக்கொடுப்போம். ஏப்ரல் 19-ல் நீங்கள் செலுத்தும் வாக்கு மோடியின் உத்தரவாதத்தை உறுதி செய்யும்" என்றார் பிரதமர் மோடி.