எத்தியோப்பியாவின் உயரிய விருதைப் பெற்ற பிரதமர் மோடி 
தமிழ்நாடு

எத்தியோப்பியாவின் உயரிய விருது: பிரதமர் மோடிக்கு கௌரவம் | PM Modi |

‘கிரேட் ஹானர் நிஷான் ஆப் எத்தியோப்பியா’ விருதைப் பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவம்...

கிழக்கு நியூஸ்

எத்தியோப்பியாவின் மிக உயரிய ‘கிரேட் ஹானர் நிஷான் ஆப் எத்தியோப்பியா’ விருதைப் பிரதமர் மோடிக்கு வழங்கி, அந்நாட்டு பிரதமர் அபி அகமது அலி கவுரவித்துள்ளார்.

அரசுமுறைப் பயணமாக ஜோர்டான் சென்ற பிரதமர் மோடி, அதைத் தொடர்ந்து ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவுக்குச் சென்றார். அந்நாட்டுப் பிரதமர் அபி அகமது அலி, பிரதமர் மோடியை விமான நிலையத்திற்கு வந்து வரவேற்றார். பின்னர் அடிஸ் அபாபாவில் உள்ள அருங்காட்சியகத்தை இருவரும் பார்வையிடச் சென்றபோது, காரை எத்தியோப்பிய பிரதமர் ஓட்டினார். அதைத் தொடர்ந்து இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையில் இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பின்னர் நடந்த விழாவில், எத்தியோப்பியாவின் மிக உயரிய ‘கிரேட் ஹானர் நிஷான் ஆப் எத்தியோப்பியா’ விருதை அந்நாட்டு பிரதமர் அபி அகமது அலி, பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி கௌரவித்தார்.

அதன்பின் விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:-

“இந்தியாவும் எத்தியோப்பாவும் தட்பவெப்ப நிலையிலும், மனப்பான்மையிலும் ஒருமித்த தன்மையைப் பகிர்ந்து கொள்கின்றன. ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன்பு, நமது மூதாதையர்கள் பரந்த கடல்களுக்கு அப்பால் தொடர்புகளை உருவாக்கினார்கள். இந்தியப் பெருங்கடலைக் கடந்து, வணிகர்கள் மசாலாப் பொருட்களையும் தங்கத்தையும் வணிகம் செய்தார்கள். அவர்கள் பொருள்களை மட்டுமின்றி நம் பாரம்பரியத்தின் கருத்துகளையும் வாழ்க்கை முறைகளையும் பரிமாறிக்கொண்டார்கள். அடிஸ் மற்றும் தோலேரா போன்ற துறைமுகங்கள் வெறும் வர்த்தக மையங்களாக மட்டுமல்லாமல், நாகரிகங்களுக்கு இடையேயான பாலங்களாகவும் விளங்கின. நவீன காலத்தில், நமது உறவு ஒரு புதிய சகாப்தத்தில் அடியெடுத்து வைக்கிறது.

1941-ல் எத்தியோப்பியாவின் விடுதலைக்காக இந்திய வீரர்கள் எத்தியோப்பியர்களுடன் இணைந்து போரிட்டனர். எத்தியோப்பியாவின் மிக உயர்ந்த சிவிலியன் விருது எனக்கு வழங்கப்பட்டுள்ளது. உலகின் மிகவும் பழமையான மற்றும் வளமான நாகரிகங்களில் ஒன்றால் கவுரவிக்கப்படுவது எனக்கு மிகுந்த பெருமைக்குரிய விஷயம். அனைத்து இந்தியர்கள் சார்பாக இந்த மரியாதையை நான் மிகுந்த பணிவுடனும் நன்றியுடனும் ஏற்றுக்கொள்கிறேன்’’ என்றார்.

எத்தியோப்பியாவின் இந்த உயரிய விருதை வாங்கும் முதல் வெளிநாட்டுத் தலைவராகப் பிரதமர் மோடி அறியப்படுகிறார். வெளிநாடுகளில் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட விருதுகளில் இது 28-வது விருதாகும்.

இதைக் குறித்து தனது எக்ஸ் தளப் பதிவில் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளதாவது:-

‘எத்தியோப்பியாவின் மாபெரும் கௌரவம்’ எனக்கு வழங்கப்பட்டுள்ளது. எத்தியோப்பிய மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நெருங்கிய கூட்டாளியான இந்தியா, உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளவும் புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் எத்தியோப்பியாவுடனான தனது கூட்டாண்மையை வலுப்படுத்த ஆர்வமாக உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

Ethiopian Prime Minister Abiy Ahmed Ali has honored Prime Minister Modi by presenting him with Ethiopia's highest award, the 'Great Honor Nishan of Ethiopia'.