தமிழ்நாடு

எலி மருந்தால் குழந்தைகள் உயிரிழந்த விவகாரம்: பெஸ்ட் கன்ட்ரோல் நிறுவனத்தின் உரிமம் ரத்து!

கிரிதரனுக்கும், பவித்ராவுக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ராம் அப்பண்ணசாமி

எலி மருந்தால் குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் தனியார் பெஸ்ட் கன்ட்ரோல் நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்துள்ள குன்றத்தூரைத் சேர்ந்த கிரிதரன் என்பவர் தனியார் வங்கியில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பவித்ரா என்ற மனைவியும், வைஷாலினி (6) என்ற மகளும், சாய் சுந்தரேசன் (1) என்ற மகனும் உள்ளனர். இவரது வீட்டில் சமீப காலமாக எலி தொந்தரவு அதிகரித்ததால், சென்னை தி. நகரில் உள்ள தனியார் பெஸ்ட் கன்ட்ரோல் நிறுவனத்தை அணுகியுள்ளார் கிரிதரன்.

இதை அடுத்து கடந்த நவ.13-ல் கிரிதரனின் வீட்டிற்கு வந்த பெஸ்ட் கன்ட்ரோல் நிறுவனத்தைச் சேர்ந்த நபர்கள், வீடு முழுவதும் மருந்தைத் தெளித்துவிட்டு, வீட்டிற்குள் மருந்து வைத்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அன்று இரவு வீட்டில் தங்கியிருந்த கிரிதரனின் குடும்பத்தினர் அனைவருக்கும் வாந்தி, மயக்கம் போன்றவை ஏற்பட்டுள்ளன.

இதனை அடுத்து அடுத்த நாள் காலை (செப்.14) அவர்கள் அனைவரும் நண்பர்களால் மீட்கப்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அப்போது குழந்தைகள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, கிரிதரனுக்கும், பவித்ராவுக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக பெஸ்ட் கன்ட்ரோல் நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், எலி மருந்தை வீட்டிற்கு வெளியே வைக்காமல் விதியை மீறி வீட்டிற்கு உள்ளே வைத்ததற்காக தி. நகரில் உள்ள சம்மந்தப்பட்ட தனியார் பெஸ்ட் கன்ட்ரோல் நிறுவனத்தின் உரிமம் தமிழக வேளாண்மைத் துறையால் ரத்து செய்யப்பட்டது.