கோப்புப்படம் ANI
தமிழ்நாடு

விசிக கொடிக் கம்பத்துக்கு அனுமதி மறுப்பு

ஆதவ் அர்ஜுனா கருத்துக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்பட திமுகவினர் எதிர்வினை ஆற்றி வருகிறார்கள். இந்தச் சூழலுக்கு மத்தியில் தான்...

கிழக்கு நியூஸ்

மதுரையில் விசிக தலைவர் திருமாவளவன் கொடியேற்றவிருந்த கொடிக் கம்பத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் வெளிச்சந்தம் கிராமத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிக் கம்பம் உள்ளது. 25 அடி உயரம் கொண்ட இந்தக் கொடிக் கம்பத்தை திருமாவளவன் 1996-ல் ஏற்றி வைத்தார். இதன் உயரம் தற்போது 45 அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதனிடையே, விசிக தலைவர் திருமாவளவன் நாளை இதே கிராமத்தில் நடைபெறும் திருமண விழாவில் பங்கேற்பதற்காக அங்கு செல்லவிருக்கிறார். அப்போது 45 அடி உயரமாக உயர்த்தப்பட்ட கொடிக் கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றவிருந்தார்.

இந்த நிலையில், கொடியை ஏற்றுவதற்கு மதுரை மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது. 20 அடி உயரத்துக்கு மேல் கம்பத்தை உயர்த்த அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் காரணம் கூறியதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன.

அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா திமுக குறித்தும் திமுக கூட்டணி குறித்தும் பேசிய கருத்துகள் அரசியல் சூழலில் கவனம் பெற்றுள்ளது. ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது பற்றிய கேள்விக்கு, கட்சியின் முன்னணி நிர்வாகிகளோடு கலந்துபேசி முடிவெடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார். ஆதவ் அர்ஜுனா கருத்துக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்பட திமுகவினர் எதிர்வினை ஆற்றி வருகிறார்கள்.

இந்தச் சூழலுக்கு மத்தியில் தான் விசிக கொடிக் கம்பத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.