PRINT-83
தமிழ்நாடு

வான் சாகச நிகழ்ச்சியை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு தோல்வியே மிஞ்சும்: மா. சுப்பிரமணியன்

அங்கே வராத ஒன்றிரெண்டு நபர்கள் பூதக் கண்ணாடியை வைத்துக் குற்றம் கண்டுபிடிக்கும் நக்கீரர்களாக இருக்கத்தான் செய்வார்கள்.

ராம் அப்பண்ணசாமி

`வான் சாகச நிகழ்ச்சிக்கான அனைத்து வசதிகளையும் அரசு ஏற்பாடு செய்திருந்தது, இதில் அரசியல் செய்ய நினைப்பவர்களுக்குத் தோல்வியே மிஞ்சும்’ என இன்று (அக்.7) காலை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்திருக்கிறார் தமிழக சுகாதார மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து வான் சாகச நிகழ்ச்சி குறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் அளித்த பேட்டி பின்வருமாறு:

`வான் சாகச நிகழ்ச்சிக்காக இந்திய விமானப்படை கேட்ட அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்துகொடுத்தது. 15 லட்சம் மக்கள் வான்சாகச நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக அரசு மருத்துமனைகளில் 4,000 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டன.

வெயிலின் தாக்கம் மிக அதிகமாகவே இருந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் பொதுமக்கள் குடைகளுடன், தண்ணீருடன் வரவேண்டும் என இந்திய விமானப்படை முன்பே அறிவுறுத்தியிருந்தது. 5 நபர்களின் இறப்பு சம்பவம் வருத்தத்திற்குரிய ஒன்று. இவை எதிர்பாராமல் நிகழ்ந்துவிட்டன.

இதற்கான அனுதாபங்களையும், வருத்தங்களையும் தெரிவிக்கிறோம். இதில் யாரும் அரசியல் செய்யவேண்டாம். இதில் அரசியல் செய்ய நினைப்பவர்களுக்குத் தோல்வியே மிஞ்சும். வெயிலின் தாக்கத்தால் மரணமடைந்த 5 நபர்களும், உயிரிழந்த நிலையில்தான் மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டார்கள்.

சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் யாரும் இறந்துபோகவில்லை. 43 நபர்கள் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையிலும், 49 நபர்கள் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையிலும், 10 நபர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். இவற்றில் மொத்தமாக 5 நபர்கள் உயிரிழந்துள்ளனர். வெயில் பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 102.

விமானப்படையின் பெரிய கட்டமைப்பை நாமும் பார்க்கவேண்டும் என்றுதான் பொதுமக்கள் திரண்டனர். இதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அரசு ஏற்பாடு செய்தது. அரசு மேற்கொண்ட ஏற்பாடுகள் அனைத்தும் உங்களைப் போன்ற ஊடகத்தினருக்குத் தெரியும்.

அங்கே வராத ஒன்றிரெண்டு நபர்கள் பூதக் கண்ணாடியை வைத்துக் குற்றம் கண்டுபிடிக்கும் நக்கீரர்களாக இருக்கத்தான் செய்வார்கள். அவர்கள் கூறுவதை வைத்து இதை அரசியலாக்க வேண்டாம்’ என்றார்.