மெரினா விமானப்படை சாகச நிகழ்ச்சியை ஒட்டி சென்னையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னை மெரினாவில் இன்று இந்திய விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏறத்தாழ 15 லட்சம் பொதுமக்கள் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் வான் சாகச நிகழ்ச்சி நிறைவு பெற்றதும் ஒரே நேரத்தில் மெரினா பகுதியில் இருந்து லட்சக்கணக்கான பொதுமக்கள் வெளியேறியதால் மெரினாவைச் சுற்றி உள்ள பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அதிலும் வான் சாகச நிகழ்ச்சி முடிந்து 3 மணி நேரங்களுக்கு மேல் ஆகியும் சென்னையின் மையப்பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் சிறிதும் குறையவில்லை. குறிப்பாக மெரினாவைச் சுற்றி உள்ள வாலாஜா சாலை, பைக்ராஃப்ட்ஸ் சாலை, சுவாமி சிவானந்தா சாலை உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன.
வான் சாகச நிகழ்ச்சிக்கு கூடும் பொதுமக்களை முன்வைத்து சென்னை போக்குவரத்துக் காவல்துறை முறையான திட்டமிடல் மேற்கொள்ளாததால் இந்தப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் செய்தி ஊடகங்களில் புகார் தெரிவித்தனர்.
மேலும், பொதுமக்களின் தேவையை முன்னிட்டு 3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்தது. இதை ஒட்டி மெட்ரோ ரயில் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காத அளவுக்கு அலைமோதியது.