தமிழ்நாடு

தவெக வழக்கு தீர்ப்புக்குப் பிறகு குவிந்த விமர்சனங்கள்: மௌனம் கலைத்த நீதிபதி என். செந்தில்குமார்! | Karur Stampede |

நீதிபதிகள் குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு கருத்துகளை வெளியிட்டதாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கிழக்கு நியூஸ்

சமூக ஊடகங்களில், தீர்ப்பளித்த நீதிபதிகளின் குடும்பப் பின்னணி மற்றும் கடந்த கால நிகழ்வுகள் எல்லாம் தோண்டி எடுக்கப்படுவதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27 அன்று கரூரில் மக்களைச் சந்திக்கும் பிரசாரக் கூட்டத்தை மேற்கொண்டார். இதில் கூட்டநெரிசல் ஏற்பட 41 பேர் உயிரிழந்தார்கள். சென்னையைச் சேர்ந்த தினேஷ் என்பவர் கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இச்சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இதுபோன்ற நிகழ்வுகளை நடத்த நிலையான செயல்முறைகள் வகுக்கப்பட வேண்டும் என உள்துறைச் செயலர் மற்றும் காவல் துறை இயக்குநருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். செந்தில்குமார், வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டார். மேலும், கரூர் சம்பவம் தொடர்பாக, இது எந்த மாதிரியான கட்சி, பிரசார வாகனத்தைப் பறிமுதல் செய்யாதது ஏன்? என விஜய் மற்றும் தவெக குறித்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்திருந்தார் நீதிபதி என். செந்தில்குமார்.

இதுதொடர்பாக சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டன. நீதிபதி என். செந்தில்குமாரின் குடும்பப் பின்னணி குறித்து எழுதப்பட்டன. திருமண நிகழ்ச்சிகளில் எடுத்துக்கொண்ட நீதிபதி என். செந்தில்குமாரின் புகைப்படங்கள் கசியவிடப்பட்டன.

இந்நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிறிசில்டா தொடர்புடைய வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். செந்தில்குமார் அமர்வு முன்பு இன்று (திங்கள்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது, "நீதிபதிகளின் குடும்பப் பின்னணி மற்றும் கடந்த கால நிகழ்வுகளையெல்லாம் சமூக ஊடகங்களில் தோண்டி எடுக்கிறார்கள். ஆனால், அவர்களின் செயல்களைப் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?" என்றார் நீதிபதி செந்தில்குமார்.

தவெக தொடர்புடைய வழக்குக்குப் பிறகு நீதிபதி என். செந்தில்குமார் குறித்து பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் இவ்வாறு கூறியிருப்பது கவனம் பெற்றுள்ளது.

இதனிடையே, கரூர் துயரச் சம்பவம் தொடர்புடைய வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு கருத்துகளை வெளியிட்டதாக கண்ணன், டேவிட், சசி என மூன்று பேரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளார்கள்.

Karur Stampede | Madras High Court | Justice N Senthilkumar | Judges |