மத்திய அரசின் அறிவிப்புப்படி, தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிதாக அமையவுள்ள அணுக்கனிம சுரங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் கடலோரத்தை ஒட்டியுள்ள நீரோடி முதல் எணயம் வரையிலான கிராமங்களில் அரிய வகை அணுக்கனிமங்களைக் கொண்ட தாது மணல் இருப்பது மத்திய அரசின் ஆய்வில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து 1,144 ஹெக்டேர் பரப்பளவிலான அப்பகுதியில் அணுக்கனிம சுரங்கம் அமைக்கவிருப்பதாக மத்திய அரசு அறிவித்தது.
இதன்படி அப்பகுதியிலிருந்து மோனோஸைட், ஸிர்கான், இல்மனைட், ரூடைல், சிலிமைட், கார்னைட் போன்ற அணுக்கனிமங்களை தாதுமணலில் இருந்து பிரித்து எடுக்கும் வகையில் சுரங்கம் அமைக்க, மத்திய அணுசக்தித் துறையின் கீழ் செயல்பட்டுவரும் IREL (Indian Rare Earths Limited) நிறுவனம் திட்டமிட்டது.
இதனைத் தொடர்ந்து இந்த அணுக்கணிம சுரங்கம் தொடர்பாக பத்மநாபபுரம் சர் ஆட்சியர் அலுவலகத்தில் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட நீரோடி, கீழ் மிடாலம், மிடாலம், எணயம் புத்தன்துறை, ஏழு தேசம், கொல்லங்கோடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் புதிதாக அமையவுள்ள தாதுமணல் சுரங்க திட்டத்துக்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
இதனை அடுத்து முதற்கட்டமாக மத்திய அரசுக்கு தபால் அனுப்பும் போராட்டத்தைப் பொதுமக்கள் நடத்தினர். தற்போது இரண்டாம் கட்டமாக, தங்களுக்குப் புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் இத்திட்டத்தைக் கைவிடுமாறு அப்பகுதி மக்கள் பதாதைகளை ஏந்தி தினமும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.