தமிழ்நாடு

மக்கள் விரோத ஆட்சி நடத்தும் திமுக படுதோல்வி அடையும்: இபிஎஸ்

ராம் அப்பண்ணசாமி

கள்ளக்குறிச்சி மரணங்கள் குறித்து சட்டப்பேரவையில் பேச அனுமதி வழங்காததைக் கண்டித்தும், விஷச்சாராய மரணங்கள் குறித்து CBI விசாரணை கோரியும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று காலை ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்கள். போராட்டத்தின் முடிவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசியவை பின்வருமாறு:

`அதிமுக உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த தேமுதிக, புரட்சி பாரதம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளுக்கு நன்றி. கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி அதிமுக போராடி வருகிறது.

திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லிக்கொண்டிருக்கும் ஆட்சியில் ஏற்பட்ட அவலங்களால் இன்று கள்ளக்குறிச்சி கண்ணீரில் மிதந்து கொண்டிருக்கிறது. கள்ளக்குறிச்சி நகரத்தின் மையப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டு அதனால் இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இந்தக் கள்ளக்குறிச்சி மரணங்களுக்கு திமுக அரசே காரணம்.

பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில் மக்கள் பாதிக்கப்பட்டவுடன் உடனடியாக நான் கள்ளக்குறிச்சிக்கு சென்று அந்த மக்களுக்கு ஆறுதல் கூறினேன். இந்த விவகாரத்தை சட்டமன்றத்தில் அரசின் கவனத்துக்குக் கொண்டு வரவே அறவழியில் விதிகளுக்கு உட்பட்டு சட்டமன்றத்தில் பேசுவதற்கு வாய்ப்பு கேட்டோம். ஆனால் சட்டப்பேரவைத் தலைவர் எங்களுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை. எங்களை வெளியேற்றிவிட்டு அதற்குப் பிறகு முதல்வர் பதிலளிக்கிறார்.

மக்கள் விரோத ஆட்சி நடத்தும் திமுக மீண்டும் படுதோல்வி அடையும். ஆட்சி இருக்கும் மமதையில், ஆணவத்தில் முதல்வர் உள்ளிட்டோர் பேசுகின்றனர். ஆணவம் வேண்டாம், சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கும், மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும்’.