ANI
தமிழ்நாடு

பாஜக கூட்டணிக்காக தவம் கிடக்கிறார்கள்: அண்ணாமலை

நாங்கள் யாருக்கும் எதிரியில்லை, எங்களது நோக்கம் பாஜகவை நிலைநிறுத்த வேண்டும் என்பதே. சரியான நேரத்தில் கூட்டணி குறித்துப் பேசுவோம்.

ராம் அப்பண்ணசாமி

கூட்டணியில் பாஜக இருந்ததால் தோற்றோம் என்று கூறியவர்கள், இன்று பாஜக கூட்டணிக்காக தவம் கிடக்கிறார்கள் என்று கருத்து தெரிவித்துள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.

வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி அமைக்கும் சூழல் உருவாகும் என்று கடந்த சில நாட்களாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், கோவை விமானநிலையத்தில் இன்று (மார்ச் 7) செய்தியாளர்களை சந்தித்து பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது,

`பாஜக தீண்டத்தகாத கட்சி, பாஜக நோட்டா கட்சி, பாஜகவினால்தான் நாங்கள் தோற்றோம் என்று கூறினார்கள். இன்று பாஜக வேண்டும் என்று தவமிருக்கும் சூழ்நிலையை எங்களின் கட்சியின் ஒவ்வொரு தலைவரும், தொண்டரும் உருவாக்கியுள்ளார்கள் என்பதற்காக பெருமைப்படுகிறேன். இன்றைக்கு பாஜக இல்லை என்றால், தமிழக அரசியல் இல்லை என்கிற சூழ்நிலை உருவாகியுள்ளது.

மற்றபடி எந்த கட்சியையும் நான் சிறுமைப்படுத்திப் பேசவில்லை. இன்றைக்கு அந்த நிலையில் பாஜக இருக்கிறது என்று மகிழ்ச்சியடைகிறோம். அந்த அளவுக்கு நாங்கள் உழைத்திருக்கின்றோம். ஏற்கனவே கூறியதுபோல எந்த கட்சியுடன் கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி எப்படியிருக்கும், அதில் எந்தெந்த கட்சிகள் இருக்கும், யார் முதலமைச்சர் வேட்பாளர் போன்றவற்றை பேசவேண்டிய நேரத்தில் பேசுவோம்.

நாங்கள் யாருக்கும் எதிரியில்லை, எங்களது நோக்கம் பாஜகவை நிலைநிறுத்த வேண்டும் என்பதே. சரியான நேரத்தில் கூட்டணி குறித்துப் பேசுவோம். தேசிய தலைவர்கள் இருக்கிறார்கள், எனவே பேசுகிற நேரத்தில் அதைப் பேசுவோம். இன்றைக்கு தேசிய ஜனநாயக கூட்டணி பலமாக இருக்கிறது.

அண்ணன் டிடிவி தினகரன் உள்ளிட்ட பலர் இந்த கூட்டணியை நம்பி பயணிக்கிறார்கள். அவர்களுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம்’ என்றார்.