தமிழ்நாடு

த.வெ.க. கடந்து வந்த பாதை!

கடந்த செப்.8-ல் த.வெ.க.வுக்கு அரசியல் கட்சியாக அங்கீகாரம் அளித்தது இந்திய தேர்தல் ஆணையம்.

ராம் அப்பண்ணசாமி

2 பிப்ரவரி 2024-ல் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்குவதாக அறிவித்தார் விஜய். தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் எழுத்துப் பிழை உள்ளதாக விமர்சனம் எழுந்தது. இதனை அடுத்து `தமிழக வெற்றிக் கழகம்’ என கட்சியின் பெயர் திருத்தப்பட்டது.

பிப்ரவரி 19-ல் தவெகவின் முதல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் விஜய் தலைமையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

மார்ச் 8-ல் தவெகவின் உறுப்பினர்கள் சேர்க்கையை கைபேசி மென்பொருள் வாயிலாக தொடங்கி வைத்தார் விஜய்.

மார்ச் 11-ல் தன் முதல் அரசியல் கருத்தாக சி.ஏ.ஏ. சட்டத்தை (இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் 2019) எதிர்த்து அறிக்கை வெளியிட்டார் விஜய்.

ஜூன் 20-ல் கள்ளக்குறிச்சிக்கு சென்று, அப்பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் விஜய்.

ஜூன் 28-ல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்ற பள்ளி மாணவர்களுக்கு தவெக சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. அந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் போதை பழக்கத்தின் கேடு குறித்து பேசினார் விஜய்.

ஜூலை 3-ல் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்ற பள்ளி மாணவர்களுக்கு தவெக சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. அந்த நிகழ்ச்சியில், நீட் தேர்வால் ஏற்படும் சிக்கல்கள் குறித்துப் பேசினார் விஜய்.

ஜூலை 6-ல் அன்றைய தமிழக பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்டிராங் படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனத்தைத் தெரிவித்தார் விஜய்.

ஆகஸ்ட் 22-ல் தவெக கட்சிக் கொடி மற்றும் பாடலை அறிமுகம் செய்தார் விஜய்.

ஆகஸ்ட் 24-ல் தவெக கட்சிக் கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்தத் தடை கோரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தது பகுஜன் சமாஜ் கட்சி.

ஆகஸ்ட் 28-ல் விக்கிரவாண்டி வி. சாலையில் மாநாடு நடத்த அனுமதி கோரி விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடிதம் அளித்தார் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த்.

செப்டம்பர் 8-ல் த.வெ.க.வுக்கு அரசியல் கட்சியாக அங்கீகாரம் அளித்தது இந்திய தேர்தல் ஆணையம். அதே நாளில், விக்கிரவாண்டியில் மாநாடு நடத்த 33 நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளித்தது விழுப்புரம் மாவட்ட காவல்துறை.

செப்டம்பர் 17-ல் தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு பெரியார் திடலுக்கு நேரில் சென்று பெரியாரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்தார் விஜய்.

செப்டம்பர் 20-ல் தவெகவின் முதல் மாநாடு அக்.27-ல் நடைபெறும் என அறிவித்தார் விஜய்.

இன்று (27 அக்டோபர்) தவெகவின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டி வி. சாலையில் நடைபெறுகிறது.