தமிழ்நாடு

ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்து வந்த பாதை

இரண்டு முறை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராகப் பதவி வகித்துள்ளார் இளங்கோவன்.

ராம் அப்பண்ணசாமி

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் (75) உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் இன்று காலை உயிரிழந்தார்.

தந்தை பெரியாரின் அண்ணன் மகனும், திமுக நிறுவன தலைவர்களில் ஒருவருமான ஈவிகே சம்பத்தின் மகனாவார் ஈவிகேஎஸ் இளங்கோவன். கடந்த 1948-ல் அன்றைய ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட ஈரோடு நகரத்தில் பிறந்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன். பள்ளிப் படிப்புக்குப் பிறகு, சென்னை மாநில கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் பட்டம் பெற்றார்.

தந்தை ஈவிகே சம்பத்தின் வழியைப் பின்பற்றி ஆரம்பம் முதலே காங்கிரஸ் கட்சியில் தீவிரமாகப் பணியாற்றிவந்தார் இளங்கோவன். 1984 சட்டப்பேரவை தேர்தலில் சத்தியமங்கலம் தொகுதியில் வெற்றிபெற்று தேர்தல் அரசியலில் நுழைந்தார் இளங்கோவன். இதைத் தொடர்ந்து 1989-ல் பவானிசாகர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

2004 மக்களவை தேர்தலில் கோபிச்செட்டிபாளையம் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றதை அடுத்து, மத்திய இணையமைச்சராக பதவி வகித்தார். இதைத் தொடர்ந்து 2009, 2014 மற்றும் 2019 மக்களவை தேர்தல்களில், முறையே ஈரோடு, திருப்பூர், தேனி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

2000 முதல் 2002 வரை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக பணியாற்றினார் இளங்கோவன். 2014-ல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை ஜி.கே. வாசன் தொடங்கிய பிறகு, 2014 முதல் 2016 வரை இரண்டாவது முறையாக மீண்டும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக பணியாற்றினார் இளங்கோவன்.

ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா, கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 2023-ல் மாரடைப்பு காரணமாக திருமகன் ஈவேரா உயிரிழந்ததை அடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு சுமார் 66 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் இளங்கோவன்.

கடந்த நவ.27-ல் மூச்சுத் திணறல் ஏற்பட்டதை அடுத்து சென்னை மணப்பாக்கம் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இளங்கோவன். இதனை அடுத்து வென்டிலேட்டர் உதவியுடன் ஐசியூ வார்டில் இளங்கோவனுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார்.