கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8) காலை பள்ளி வாகனம் மீது ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில், மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த மாணவர் ஒருவரும், வாகன ஓட்டுநரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டை இன்று (ஜூலை 8) காலை 7.40 மணி அளவில் ஒரு பள்ளி வாகனம் கடக்க முயன்றது. அப்போது விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பயணிகள் ரயில் (வண்டி எண் 56813) அந்த பள்ளி வாகனத்தின் மீது மோதியது.
இதனால் சில மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்டு, பள்ளி வாகனம் கடுமையாக சேதமடைந்தது. இந்த விபத்து நடைபெற்றபோது பள்ளி வாகனத்தில் 4 மாணவர்களும், ஓட்டுநரும் இருந்துள்ளனர். இதில், மாணவர்கள் சாருமதியும் (15), நிமலேஷும் (10) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர் செழியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்தில் படுகாயமடைந்த மாணவர் விஸ்வேஷ் மற்றும் ஓட்டுநர் சங்கர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ரயில்வே கேட்டில் பணியில் இருந்த கேட் கீப்பர் பங்கஜ் ஷர்மா கேட்டை மூடாமல் அலட்சியமாக தூங்கிக்கொண்டிருந்தே இந்த விபத்து நடைபெற்றதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பங்கஜ் ஷர்மா, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த ரயில் விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ. 5 லட்சமும், படுகாயமடைந்தோருக்குத் தலா ரூ. 1 லட்சமும், லேசாக காயமடைந்தோருக்குத் தலா ரூ. 50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதேபோல, உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ. 5 லட்சமும், படுகாயமடைந்தோருக்குத் தலா ரூ. 2.5 லட்சமும், லேசாக காயமடைந்தோருக்குத் தலா ரூ. 50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.