ANI
தமிழ்நாடு

சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல: இபிஎஸ்

சர்ச்சைக்குரிய கருத்தை பிரதமர் மோடி வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல என்று...

கிழக்கு நியூஸ்

சர்ச்சைக்குரிய கருத்தை பிரதமர் மோடி வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

ராஜஸ்தானில் பிரதமர் மோடி பரப்புரையில் பேசியபோது, மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியின்போது நாட்டின் வளத்தில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை என்று காங்கிரஸ் கூறியது. அதாவது, அனைத்து சொத்துகளையும் பறிமுதல் செய்து, அதை அதிக குழந்தைகளைக் கொண்டுள்ளவர்கள் மத்தியிலும், ஊடுருவி வந்தவர்கள் மத்தியிலும் மறுவிநியோகம் செய்வார்கள். கடின உழைப்பால் நீங்கள் ஈட்டிய பணத்தை, ஊடுருவி வந்தவர்களிடம் கொடுக்கலாமா? இதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா என்றார். பிரதமரின் இந்தப் பேச்சுக்கு பல அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தார்கள்.

இந்நிலையில் பிரதமர் மோடியின் ராஜஸ்தான் பரப்புரை குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது, இஸ்லாமிய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகும். வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல் கட்சித் தலைவர்களும், நாட்டின் உயர் ஆட்சிப் பதவியில் உள்ள பாரதப் பிரதமரும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல.

இஸ்லாமிய மக்களுடைய மனது புண்படும்படி இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பது ஏற்புடையதல்ல. அரசியல் கட்சித் தலைவர்களும், ஆட்சி அதிகாரத்தில் மாண்புமிகு உயர் பதவியில் உள்ளவர்களும் இதுபோன்ற கருத்துகளைத் தவிர்ப்பது நாட்டின் நலனுக்கும், மத நல்லிணக்கத்திற்கும் நல்லது.

அரசியல் கட்சித் தலைவர்களின் இதுபோன்ற சர்ச்சைக் கருத்துகளால் சிறுபான்மையின மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், மத உணர்வுகளைத் தூண்டும் விதமாகவும் அமைகிறது. தேர்தல் பிரச்சாரத்திற்காக கண்ணியம் தவறிய இதுபோன்ற மத துவேசக் கருத்துகளை யார் பேசினாலும் அது, இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும். நாட்டின் நலனுக்காக இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.