தமிழ்நாடு

விஜயின் இதயத்துக்குள் காயமோ, வலியோ இல்லை: சீமான் | Seeman | TVK Vijay | Karur Stampede |

"'இதற்கு நான் தான் பொறுப்பு, எனவே என் மீது நடவடிக்கை எடுங்கள்' என்று தான் விஜய் பேசியிருக்க வேண்டும்."

கிழக்கு நியூஸ்

கரூர் கூட்டநெரிசல் உயிரிழப்புகள் குறித்து விஜய் பேசியதைப் பார்க்கும்போது, அவருடைய இதயத்துக்குள் காயமோ, வலியோ இல்லை என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

"தம்பியின் (தவெக தலைவர் விஜய்) அந்தக் காணொளியைப் பார்க்கும்போது, அவர் பேசியதில் அவருக்கு இதயத்துக்குள் காயமோ, வலியோ இல்லை. இருந்திருந்தால், அது அவருடைய மொழியிலேயே வெளிப்பட்டிருக்கும். அது வெளிப்படவில்லை. அதைக் கேட்கும்போது கஷ்டமாக உள்ளது.

அந்த நிகழ்வைப் பொறுத்தவரை, தம்பி விஜய் அந்த இடத்துக்குப் பரப்புரைக்குச் சென்றதால்தான் இது நடந்தது. விஜய் அங்கு செல்லாமல் இருந்திருந்தால் இது நிகழ்ந்திருக்காது. விஜய் சென்றதால்தான் இது நிகழ்ந்தது. அப்படியென்றால் காரணம் யார்?

மற்ற இடங்களில் நடக்கவில்லை, இங்கு ஏன் நடந்தது என்று கேட்கிறீர்கள். அப்படியெனில் அந்த இடத்திலும் இந்த நிகழ்வு நடக்க வேண்டும் என நினைக்கிறீர்களா? அந்த இடத்தில் ஏன் நடக்கவில்லை என்று நினைக்கிறீர்களா?

குஜராத்திலிருந்து புறப்படும் விமானம் மட்டும் ஏன் வெடித்தது என்று கேட்பீர்களா? எல்லோரும் சென்ற பேருந்து விபத்தில் சிக்கவில்லை. ஆனால் இந்தப் பேருந்து மட்டும் ஏன் விபத்தில் சிக்கியது என்று கேட்பீர்களா? அப்படி கேட்பது தவறு.

எல்லாக் கூட்டங்களிலும் மக்கள் மயங்கி விழுந்தார்கள். இந்தக் கூட்டத்திலும் மயங்கி விழுந்தார்கள். நெரிசல் காரணமாக மிதித்து, காயம் ஏற்பட்டு உயிரிழந்தார்கள். அதனால் தான் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

ஆள் புகுந்தார்கள், கத்தியால் குத்தினார்கள் என்றால், மருத்துவமனை சென்று பார்த்தபோது, கத்தியால் குத்தப்பட்ட காயம் காரணமாக அனுமதிக்கப்பட்டதாக ஒருவர் கூட இல்லையே. கால், கை, கழுத்தில் காயம். இவையெல்லாம் மிதித்ததால் ஏற்பட்ட காயங்கள். மயங்கி விழுந்துவிட்டோம், கீழே விழுந்ததில் மிதித்துவிட்டார்கள் என்று மருத்துவமனையில் உள்ளவர்கள் கூறுகிறார்கள்.

சிலர் கூறும்போது, தாங்கள் புறப்படுகிறோம் என்றபோது தலைவர் வந்துவிட்டார், பொறுத்திருங்கள் என்று கூறி தடுத்து நிறுத்தினார்கள். இதில் நெரிசலில் சிக்கிக்கொண்டோம், மயங்கிவிட்டோம் என்று தான் கூறினார்.

காரணம், காலை முதல் சாப்பிடவில்லை, தண்ணீர் அருந்தவில்லை. தம்பியிடமே (விஜய்) தண்ணீர் பாட்டிலை தூக்கிப் போடுங்கள் என்று கேட்கிறார்கள். ஒருவருடையத் தேவைக்காக அவர் தண்ணீர் பாட்டிலை தூக்கி வீசுகிறார். அப்படியெனில், சுற்றியுள்ள எல்லோருக்கும் அதே தாகம் தானே.

எனவே, பேசும்போது அந்த வலியை அவர் கடத்தியிருக்க வேண்டும். வலியை உருக்கமாகக் கடத்தியிருக்க வேண்டும். அதைச் செய்யவில்லை.

விஜய் பேசும்போது, 'மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால், என்மீது எடுங்கள்' என்று தான் பேசியிருக்க வேண்டும். தன்னை நம்பி வந்தவர்களை, தன்னுடன் இருந்தவர்களைக் கைது செய்ய வேண்டாம், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று விஜய் கூறியிருக்க வேண்டும். 'இதற்கு நான் தான் பொறுப்பு, எனவே என் மீது நடவடிக்கை எடுங்கள்' என்று தான் விஜய் பேசியிருக்க வேண்டும்.

'நீங்கள் ஏதாவது பழிவாங்க வேண்டும் என நினைத்தால்', என்று விஜய் பேசுவது திரைப்பட கதாநாயகன் வசனத்தைப் போல உள்ளது. இப்படி பேசுவது நல்ல அணுகுமுறை இல்லை.

சிஎம் சார் என்று பேசுவது கூட, ஒரு குழந்தை விளையாட்டுக்குக் கூப்பிடுவதைப் போல உள்ளது. முதல்வர் மீது மதிப்பு இல்லாமல் போகட்டும். ஆனால், அவர் அமர்ந்துள்ள நாற்காலியானது இந்த நிலத்தில் பெருந்தலைவர்கள் அமர்ந்துள்ள நாற்காலி. ஓமந்தூர் ராமசாமி ரெட்டியால், குமாரசாமி, மூதறிஞர் ராஜாஜி, பெருந்தலைவர் காமராஜ், பேரறிஞர் அண்ணா போன்ற பெருந்தலைவர்கள் இருந்த இடம் இது. எனவே, கவனமாகப் பேச வேண்டும்.

சிஎம் சார், சிஎம் சார் என்றெல்லாம் பேசக் கூடாது. அது தன்மையானப் பதிவு அல்ல. உயிரிழப்புகளின் பின்னணியில் நடக்கும் நிகழ்வுகள் இறப்பைவிட வேதனையாக உள்ளது.

அது தான் சங்கடங்களாக உள்ளன. இதற்கு முன்பு எத்தனையோ நடிகர்கள் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள். விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக், கமல் ஹாசன் எனப் பலர் அரசியல் கட்சியைத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் அவையெல்லாம் இப்படியெல்லை. இவ்வளவு நேரம் காத்திருந்தார்கள், பசியுடன் இருந்தார்கள், மயங்கினார்கள் என்பதெல்லாம் நிகழவில்லை. எனவே, இனி வரும் காலங்களில் இந்த முறையை மாற்றியமைக்க வேண்டும்" என்றார் சீமான்.

இந்தப் பேட்டியில், விஜய் எப்படி பேசியிருக்க வேண்டும் என்றும் சீமான் பேசிக் காட்டினார்.

கரூர் துயரச் சம்பவம் குறித்து காணொளி மூலம் பேசிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், "முதல்வர் சார், உங்களுக்கு ஏதாவது பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். அவர்கள் மீது கை வைக்காதீர்கள். நான் வீட்டில் இருப்பேன் அல்லது அலுவலகத்தில் இருப்பேன். என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்" என்றார். இது பெரும் விமர்சனத்துக்குள்ளானது.

Seeman | TVK Vijay | Vijay | Karur | Karur Stampede | Vijay Video |