தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி கேட்டு இயக்குநர் பா. இரஞ்சித் தலைமையில் அமைதிப் பேரணி

ராம் அப்பண்ணசாமி

பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலைக்கு நீதி கேட்டு இயக்குநர் பா. இரஞ்சித் தலைமையில் சென்னை எழும்பூரில் அமைதிப் பேரணி நடைபெற்று வருகிறது.

கடந்த ஜூலை 5-ல் பகுஜன் சமாஜ் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெரம்பூரில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த பகுஜன் சமாஜ் தேசியத் தலைவர் மாயாவதி சென்னைக்கு வருகை தந்தார்.

ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பா. இரஞ்சித், அவரது இறுதி ஊர்வலத்திலும் கலந்து கொண்டார். பிறகு, ஆம்ஸ்ட்ராங் மரணத்தை முன்வைத்து திமுக அரசுக்கும், சமூக ஊடகங்களில் ஆம்ஸ்ட்ராங் மரணம் குறித்து கருத்துகள் தெரிவித்தவர்களுக்கும் தன் எக்ஸ் கணக்கில் பதிவிட்டு கேள்விகளை எழுப்பினார் இரஞ்சித்.

இதைத் தொடர்ந்து கடந்த ஜூலை 16-ல் ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலைக்கு நீதி கேட்டு ஜூலை 20-ல் நினைவேந்தல் பேரணி நடத்தப்படும் என்று அறிவித்தார் பா. இரஞ்சித். இந்தப் பேரணியில் தலித் கூட்டமைப்பின் தலைவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், பல்வேறு சங்கங்கள் மற்றும் கலைஞர்கள் கலந்துகொள்வார்கள் என்றும் தன் பதிவில் அவர் அறிவித்தார்.

பா. இரஞ்சித் முன்பு அறிவித்தபடி எழும்பூரில் இன்று நடைபெற்று வரும் இந்த அமைதிப் பேரணியில், `என்ன செய்யப்போகிறது தமிழக அரசு? வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை வலிமைப்படுத்து!, சேரிகள் மீது அனுதினமும் வன்கொடுமை. இதுதானா திராவிட மாடல் ஆட்சியின் பெருமை? உண்மையான குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்து!’ போன்ற பதாகைகளை அமைதி ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் ஏந்தி இருந்தனர்.

எழும்பூர் ரமாடா ஹோட்டலுக்கு அருகே தொடங்கிய அமைதிப் பேரணி, ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்துக்கு அருகே நிறைவடைகிறது. இந்த அமைதிப் பேரணியில் இயக்குநர் பா. இரஞ்சித்துடன், நடிகர் மன்சூர் அலிகான், தினேஷ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.