அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் 
தமிழ்நாடு

சொத்துகுவிப்பு வழக்கில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தை விடுவித்த உத்தரவு ரத்து!

அமைச்சர் உள்ளிட்டோருக்கு எதிரான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து ஆறு மாதங்களுக்குள் விசாரணையை நடத்தி முடிக்க, கடலூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார்.

ராம் அப்பண்ணசாமி

சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து திமுக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து கடலூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஏப்.25) உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1996-2001 மற்றும் 2006-2011 திமுக ஆட்சிக்காலங்களில் தமிழக அமைச்சராகப் பதவி வகித்த எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வருமானத்துக்கு அதிகமாக ரூ. 3 கோடி சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.

அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அவரது மனைவி செந்தமிழ்ச்செல்வி மற்றும் மகன் கதிரவன் ஆகியோர் மீதான இந்த சொத்துகுவிப்பு வழக்கை விசாரித்த கடலூர் நீதிமன்றம், மூவரையும் வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவு பிறப்பித்தது.

கடலூர் மாவட்ட நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் கடந்த 2016-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவு 13(1)(e) மற்றும் 13(2) ஆகியவற்றின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

நீதிபதி வேல்முருகன் அமர்வில் இந்த வழக்கு மீதான விசாரணை நடைபெற்றபோது, `குடும்ப சொத்துக்களையும், அறக்கட்டளை சொத்துகளையும் வருமானத்துக்கு அதிகமான சொத்துக்கள் என்று லஞ்ச ஒழிப்புத் துறை குறிப்பிட்டுள்ளது. இந்த வழக்கில் இருந்து விடுவித்து கடலூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரியானது’ என்று அமைச்சர் தரப்பில் வாதிடப்பட்டது.

குற்றப்பத்திரிகை மற்றும் முதல் தகவல் அறிக்கையை மேற்கோள்காட்டி லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இன்று (ஏப்.25) தீர்ப்பளித்தார்.

இதன்படி, சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து கடலூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த நீதிபதி, அமைச்சர் உள்ளிட்டோருக்கு எதிரான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து ஆறு மாதங்களுக்குள் வழக்கு விசாரணையை நடத்தி முடிக்க, கடலூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார்.

முன்னதாக, இரு சொத்துகுவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.