ANI
தமிழ்நாடு

ஓ.பி.எஸ். - டி.டி.வி. கூட்டணி பாஜக ஆதரவோடு 5 இடங்களில் போட்டியிட முடிவு?

தினகரன் ஆதரவாளர்கள் குக்கர் சின்னத்திலும் ஓ.பி.எஎஸ் ஆதரவாளர்கள் இரட்டை இலை சின்னத்திலும் போட்டியிட முடிவெடுத்துள்ளார்கள்

ஜெ. ராம்கி

பாஜக கூட்டணியில் ஓ.பி.எஸ். மற்றும் டி.டி.வி. தினகரன் மினி கூட்டணி இணைய வாய்ப்புள்ளதாகவும் அதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு முழுவதும் 5 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பிருப்பதாகவும் தெரிகிறது.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தமிழ்நாட்டில் கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு போன்றவற்றை இறுதி செய்யும் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாகக் களமிறங்கியுள்ளன. நான்கு முனைப் போட்டி என்பதை இம்முறை தவிர்க்க முடியாது என்கிறார்கள், அரசியல் விமர்சகர்கள். திமுக கூட்டணியின் பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. அதிமுகவும் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் பாஜக தலைமையிலான கூட்டணியில் ஓ.பி.எஸ். மற்றும் டி.டி.வி. தினகரனைச் சேர்ப்பதற்கான முதற்கட்டப் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளன. ஓ.பி.எஸ். மற்றும் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் தேர்தலில் போட்டியிடத் தயாராகி வருகிறார்கள்.

திருச்சி மற்றும் சிவகங்கையில் போட்டியிட அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனின் ஆதரவாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளார்கள். எனினும், தேனி தொகுதியில் மட்டும் டி.டி.வி. தினகரன் போட்டியிட முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குக்கர் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

தேனி, மதுரை, தஞ்சையில் ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் போட்டியிட முடிவெடுத்துள்ளார். பத்திரிக்கையாளர்களை சந்தித்துப் பேசியவர், நாடாளுமன்றத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம், தற்காலிகமாகத்தான் இரட்டை இலை எடப்பாடி தலைமையிலான அணிக்கு வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் நாங்களும் இரட்டை இலையைக் கேட்போம். இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. உண்மையான அதிமுக தொண்டர்கள் எங்கள் பக்கம் உள்ளனர் என்று தெரிவித்தார்.

எடப்பாடி தலைமையிலான அதிமுகவை அதிகாரபூர்வமானதாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்திருப்பதால் ஓ.பி. எஸ். அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்க வாய்ப்பில்லை. ஒருவேளை கிடைக்காவிட்டால் தாமரை சின்னத்தில் போட்டியிடத் தயாராகி வருவதாக அவரது ஆதரவாளர்கள் வட்டாரத்தில் பேசப்படுகிறது.