திமுகவில் ஒரு தொண்டனாக இணைந்துள்ளேன் என்று தெரிவித்த முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி சர்வாதிகாரி போல் செயல்படுகிறார் என்று குற்றம்சாட்டினார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலினைச் சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். அவரை முதலமைச்சர் ஸ்டாலின் ஆரத் தழுவி வரவேற்றார். அப்போது, அமைச்சர்கள் கே.என். நேரு, எவ வேலு, தங்கம் தென்னரசு, துணை முதலமைச்சர் உதயநிதி ஆகியோர் உடனிருந்தனர்.
அண்ணா தொடங்கிய தாய் கழகம் திமுக
அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஓ. பன்னீர்செல்வம் கூறியதாவது:-
இன்று அண்ணா தொடங்கிய தாய் கழகமான திமுகவில் மகிழ்ச்சியுடன் என்னை இணைத்துக் கொண்டிருக்கிறேன். திமுக தலைவர் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எனது முதல் நன்றியும் வணக்கமும். அரசியலில் அண்ணா, கலைஞர் காட்டிய வழியில் அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்லும் அரசியல் பண்பாடோடு ஸ்டாலின் கட்சியையும் ஆட்சியையும் வழி நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதை நன்றாகவே உணர்ந்து நான் திமுகவில் இணைந்திருக்கிறேன்.
சர்வாதிகாரி எடப்பாடி பழனிசாமி
அரசியலில் இன்று சர்வாதிகாரியாக ஆணவப் போக்கோடு நடந்து கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி, எந்தக் காலத்திலும் அதிமுக வெற்றி பெறாத சூழலை உருவாக்கியுள்ளார். அதிமுகவில் தற்காலிக பொதுச்செயலாளாக பொறுப்பில் இருக்கின்ற சர்வாதிகாரியான எடப்பாடி பழனிசாமி, பொறுப்பேற்ற நாள் முதல் இன்று வரை தமிழ்நாட்டையும், அதிமுகவையும் அழிவுப் பாதைக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறார் என்பதைத்தான் அதிமுக தொண்டர்கள் வருத்தத்துடன் நினைத்து தான், ஸ்டாலின் பொறுப்பேற்றிருக்கும் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். அதிலும் குறிப்பாக தென் மாவட்டங்களைப் பொறுத்தளவில் அங்கிருந்து எந்தவொரு தலைவரும் வந்துவிடக் கூடாது என்பதில் எடப்பாடி பழனிசாமி கவனமாக இருந்து, தென்மாவட்டங்களில் இருக்கும் அதிமுகவின் அனைத்து நிலைகளிலும் அத்தகையவர்களை அழிப்பதில் முனைப்பு காட்டி வருகிறார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் லட்சக்கணக்கான அதிமுகவின் தொண்டர்கள், ஸ்டாலினின் தலைமை ஏற்று திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
முதலமைச்சருக்குப் புகழாரம்
அரசியல் இயக்கத்தை அரவணைப்போடு எப்படி நடத்த வேண்டும் என்ற இலக்கணத்தோடு ஸ்டாலின் திமுகவை வழிநடத்திச் செல்கிறார். அதேபோல் கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியில் முதலமைச்சராக அனைத்து நிலைகளிலும் அனைத்து துறைகளிலும் நாட்டு மக்களுக்கு சிறப்பான ஆட்சியை அர்ப்பணிக்கின்ற நோக்கத்துடன் ஸ்டாலின் நல்லாட்சியை, சிறந்த ஆட்சியை, சீர்மிகுந்த ஆட்சியை மக்களுக்குத் தந்து, பல சாதனைகளைப் புரிந்து கொண்டிருக்கிறார் என்பதை மக்கள் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். பெண்கள் இன்று மனமகிழ்ச்சியுடன் குடும்பத்தின் தலைவியாக இருந்துகொண்டு எந்தவித சிரமமும் இல்லாமல் குடும்பத்தை வழிநடத்திச் செல்லும் வகையில் அனைத்தும் உதவிகளையும் முதலமைச்சர் தருகிறார் என்ற மனமகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அண்ணாவைப் போல் ஸ்டாலின்
சட்டமன்ற வரலாற்றில் அண்ணா எப்படி அனைத்துக் கட்சிகளையும் அணுகினாரோ அதேபோல் ஸ்டாலினும் சட்டமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களுக்கும் தாயுள்ளத்தோடு பேசும் உரிமையைக் கொடுத்து கருத்துகளை உன்னிப்பாக கவனித்து, அதற்குத் தக்க பதில்களை அவர் தரும் பாங்கு, தமிழ்நாட்டு மக்கள் அனைவரையும் கவர்ந்திருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது. அந்த முடிவின்படி தமிழ்நாடு மக்கள் திமுகவுக்கு தங்கள் ஆதரவைத் தொடர்ந்து தந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும், முதலமைச்சராக ஸ்டாலினை ஆதரிக்கும் மனநிலை அனைத்து தரப்பு மக்களிடமும் நிறைந்திருக்கிறது. அண்ணா, கலைஞர் வழியில் திராவிட சித்தாந்தைக் காக்கும் முன்னணித் தலைவராக ஸ்டாலின் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
திமுகவில் தொண்டனாக இணைந்துள்ளேன்
நான் முதலமைச்சராக பொறுப்பேற்றபோது கருணாநிதி பாசத்தோடு, பச்சைத் தமிழர் பன்னீர்செல்வம் என்று என்னைப் பாராட்டினார். திராவிட இயக்கத்தையும், கொள்கையையும் காக்க திமுகவே தலைசிறந்த இயக்கம். முழு ஈடுபாட்டோடும் மகிழ்ச்சியோடும் என்னைத் திமுகவில் இணைத்துக் கொண்டிருக்கிறேன். ஒரு தொண்டனாக நான் இதில் இணைந்திருக்கிறேன். வளர்ந்துவிட்ட இந்த இயக்கத்திற்கு நானும் உறுதுணையாக இருந்து வளர்ச்சிக்கு முழுமையாக உழைப்பேன். இது நான் சுயமாக சிந்தித்து, கடந்த காலத்தில் ஏற்பட்ட கசப்பான நிலைமைகளுக்கு முடிவுகட்ட வேண்டும் என்பதை யோசித்து, அரசியல் நாகரிகம் கருதி எடுத்த முடிவு. ஒரு கட்சியில் இயக்கும் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் போக்கு அதிமுகவில் இல்லை. அதிமுகவைப் பாராட்டிப் பேச நான் இங்கே வரவில்லை" என்றார்.
O. Panneerselvam said that he had joined the DMK as a volunteer and accused Edappadi Palaniswami is acting like a dictator.